Home நாடு மகாதீர் : “தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்”

மகாதீர் : “தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்”

939
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு குறித்து பிற்பகல் 4.15 மணியளவில் இயங்கலை வழியான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

“1969-ஆம் ஆண்டு மே 13 கலவரத்திற்குப் பின்னர் தேசிய நடவடிக்கை மன்றம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் அமைத்ததுபோல், இப்போதும் அமைக்கும்படி மாமன்னரிடம் நான் பரிந்துரைத்தேன். அப்போது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இதே போன்ற தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைத்து (National Operations Council – NOC)  அதைத் தலைமை தாங்கும் பொறுப்பை துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக் வசம் ஒப்படைத்தார். இப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். மக்களிடம் செல்வாக்கை இழந்த அரசாங்கம்” என்று மகாதீர் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இருப்பினும் தனது பரிந்துரை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தான் கருதவில்லை என்றும் மகாதீர் கூறினார். “எனது பரிந்துரையை மாமன்னர் நிராகரிக்கவில்லை. தேவையில்லை என்றும் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற பரிந்துரை முதலில் அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என மாமன்னர் கூறினார்” என்றும் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் அரசாங்கம் இத்தகைய பரிந்துரையைச் சமர்ப்பிக்கும் என தான் கருதவில்லை என்று கூறிய மகாதீர், இதுபோன்ற தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கருதவில்லை என்றார்.

“அவ்வாறு தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்கப்பட்டால், அதில் எனது சேவைகளை வழங்கத் தயாராக இருக்கின்றேன். அரசாங்கம் விரும்பினால் நான் சேவையாற்றத் தயாராக இருக்கின்றேன் என மாமன்னரிடம் கூறினேன். எனினும் இந்தப் பரிந்துரைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் நான் கருதவில்லை” என்றும் மகாதீர் கூறினார்.

தான் கூறிய கருத்துகளை மாமன்னர் குறிப்பெடுத்துக் கொண்டார் என்று கூறிய மகாதீர், மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தில் மாமன்னர் என்ன கூறப் போகிறார் என்பது தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை மாமன்னர் சந்தித்தார்.

முதல் தலைவராக நேற்று காலையில் காலையில் பிரதமர் மொகிதின் யாசினைச் சந்தித்த மாமன்னர், அதன் பிறகு அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா கட்சியின் முகமட் சாபு ஆகியோரையும் சந்தித்தார்.

இன்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம், மசீச தலைவர் வீ கா சியோங் ஆகியோரையும் சந்தித்த மாமன்னர் பிற்பகலில் மகாதீரைச் சந்தித்த பின்னர் சபா வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலைச் சந்தித்தார்.