மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்அவர்களின் பத்திரிகை அறிக்கை
“எஸ்பிஎம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்”
இன்று வெளியிடப்பட்டிருக்கும் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பானத் தேர்ச்சிகளைப் பெற்றிருக்கும் அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவ, மாணவியருக்கு எனது நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி அடைவது என்பது ஒரு மாணவனின் கல்விப் பயணத்தில் மிக மிக முக்கியமாகும். மாணவர்களும் எதிர்காலத்தில் இதைக் கண்டிப்பாக உணர்வார்கள்.
இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரையில் கல்வி மூலம்தான் நாம் இந்த நாட்டில் ஓரளவுக்கு கௌரவமான, உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே, இன்று எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி அடைந்து உயர்கல்வியைத் தொடரப்போகும் இந்திய மாணவர்கள்தான் நமது சமுதாயத்தின் எதிர்காலச் சிற்பிகள் என்பதை அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இன்று சிறப்பான எஸ்பிஎம் தேர்ச்சிகளை அடைந்த நமது மாணவர்கள்தான் நமது சமுதாயத்தை எதிர்காலத்தில் குன்றில் இட்ட விளக்காக ஒளிரச் செய்யப் போகும் இளைய தலைமுறையினர். நமக்குப் பின்னர் நமது சமுதாயத்தை வழிகாட்டியாக இருந்து வழி நடத்தப் போகிறவர்களும் அவர்கள்தான்.
எனவே, சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் தங்களின் விடாமுயற்சியைக் கைவிடாது தொடர்ந்து நன்கு படித்து, முன்னேறி தங்களின் குடும்பத்தினருக்கும் நமது சமுதாயத்திற்கும் பயன்படும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
அதே வேளையில் இந்த எஸ்பிஎம் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை அடையாதவர்கள், பின்னடைவைச் சந்தித்தவர்களும் பலர் இருப்பர். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தோல்வி என்பதும் பின்னடைவு என்பதும் முடிவல்ல! ஒரு தொடக்கமே! அதிலிருந்தும் நாம் நிறைய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள் யாரும் கலங்க வேண்டாம். கவலைப்பட வேண்டாம். உங்களின் விடாமுயற்சியையும், உழைப்பையும் நீங்கள் கைவிடாது தொடர்ந்து கல்வியைத் தொடர ஆர்வம் கொண்டிருந்தால் அதற்கான எல்லா உதவிகளையும் மஇகா வழங்கும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு வழங்குகிறேன்.
மஇகாவின் கல்வித் திட்டங்கள் என்பது சிறந்த தேர்ச்சி பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல! மாறாக ஒட்டுமொத்த சமுதாயமும் தொழில்கல்வி போன்ற மற்ற அம்சங்களிலும் முன்னேற வேண்டும் என்பதும் தேர்வுகளில் தோல்வியடைந்து பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு புதிய வாசல்களைத் திறந்து, அவர்களையும் கைதூக்கி விட வேண்டும் என்பதும்தான் மஇகாவின் குறிக்கோள்.
எனவே, எஸ்பிஎம் தேர்வுகளில் போதிய தேர்ச்சி பெறாவிட்டாலும் தொடர்ந்து கல்வியைப் பெற விரும்புபவர்கள், அடுத்த கட்ட கல்விக்கான ஆலோசனைகளைப் பெற விரும்புபவர்கள், மஇகா கல்விக்குழுவையோ அல்லது அவர்களின் சொந்த ஊர்களில் உள்ள மஇகா கிளை, தொகுதி, மாநிலத் தலைவர்களையோ அணுகினால் உங்களுக்குரிய உதவிகளை மஇகா இயன்றவரையில் செய்யும்.
எஸ்பிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிகளை அடைந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்தும் பாராட்டும் கூறி அவர்களின் கல்விப் பயணம் மேலும் சிறப்புடன் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புடன்,