Home நாடு “பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து

“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து

1533
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2021 ஜனவரி 12-இல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் குறித்தும் தேசிய மீட்சித் திட்டம் பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மாட்சிமைக்குரிய மாமன்னர் அரசுக்கு அறிவுறுத்தி இருப்பதை மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) வரவேற்பதாக அதன் தேசியத் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தாக்கத்தை இன்னும் மேலாக கையாள்வதற்கு ஒரு நிலையான-வலிமையான அரசு தேவை என்றும் மாமன்னர் தம் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அத்துடன், 2021 ஆகஸ்ட் முதல் நாளுக்குப் பின் அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றும் மக்கள் ஆதரவு பெற்ற நிலையான அரசு அமைய வேண்டும் எனவும் மலாய் ஆட்சியாளர்கள் தெரிவித்திருப்பதையும் எம்ஏபி கவனத்தில் கொள்கிறது.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெரும்பான்மையை உறுதிப்-படுத்தும் தரப்பினரே ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற பொதுவான-உலக நியதிக்கு ஏற்ப தற்போதைய அரசு தனக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் நிரூபித்து ஜனநாயகத்தை காப்பதுடன் பலதரப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டியதன் தேவை குறித்து மிகவும் நுட்பமான கருத்துகளை அரண்மனைக் காப்பாளர்வழி மாமன்னர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனவே, இந்தக் கட்டத்தில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இயங்கலை மூலம் நடத்தி, உலகின் பெரும் எதிரியான கோவிட்-19 நச்சிலுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டியது அவசியம் என்பதை எம்ஏபி வலியுறுத்துகிறது.

“நிறைவாக, ஆட்சியாளர் மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு செவிசாய்க்கும் வகையில், பிரதமர் மொகிதின் யாசின் தன்னுடைய அமைச்சரவையை உடனே கலைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இதைச் செய்ய தவறுவாரேயானால், நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அவர் பதவி விலகி வேறொரு தலைவரால் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பலவீனமான பிரதமரின்கீழ் நாடு இயங்க முடியாது. இது, நேரடி அந்நிய முதலீட்டையும் வர்த்தகத்தையும் ஒருசேர பாதிக்கும்” என்றும் வேதமூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினார்.

எனவே, அரசியல்வாதிகள் தங்களின் வேறுபாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையும் விசுவாசமும் மிக்க மலேசியர்களாக ஒன்றுபட்டு மலாய் ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஈடேற்ற வேண்டிய கட்டாய தருணம் இது என்பதை எம்ஏபி சார்பில் வலியுறுத்துவதாக ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.