Home நாடு சுகாதார அமைச்சில் இனவாதமா? – டாக்டர் தமிழ் மாறன் சாடல்

சுகாதார அமைச்சில் இனவாதமா? – டாக்டர் தமிழ் மாறன் சாடல்

879
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பூமிபுத்ரா மருத்துவ பட்டதாரிகளின்மீது மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய இஸ்லாம் மருத்துவர் சங்கமும் பொது சுகாதார மருத்துவ சங்கமும் சுகாதாரத் துறையை வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் தமிழ் மாறன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் நிறம்-இனம் பார்க்காமல் மனிதநேயத்துடன் அணுகுவதால், மருத்துவத் துறையைப் பொறுத்தவரை ஏற்றத் தாழ்வு இல்லை என்றே நம்புகிறோம்.

இத்தகைய நிலையில், வேலைவாய்ப்பின்மையைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் வேலைவாய்ப்பில் நீதிக்கும் நியதிக்கும் புறம்பாக முன்னுரிமை அளிக்கும்படி மேற்குறிப்பிட்ட அமைப்புகள் சுகாதாரத் துறையிடம் எப்படி கோரிக்கையை முன்வைக்க முடியும்? சுகாதாரத் துறை என்பது வேறுபாட்டைக் கடந்து மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவதற்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.

#TamilSchoolmychoice

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையால் மலேசிய கூட்டு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்களா? வேலைவாய்ப்பு இன்மை என்பதால் தகுதி-திறமை-ஈடுபாடு-கடப்பாடு ஆகிய கூறுகளை ஒதுக்கிவிட்டு குறிப்பிட்ட சாராரை மட்டும் மலேசிய சுகாதாரத் துறை பணியில் அமர்த்த முடியுமா?

மருத்துவத் தொழில் என்பது அனைத்து வேறுபாடுகளையும் கடந்து குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார சேவை அளிக்கும் பொதுத் துறையைச் சார்ந்தது என்பதால், இதில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.

எனவே, அரசியலுக்கும் தேவையற்ற வற்புறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல், தகுதியான மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டு நலம் கருதியும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைத்திடவும் சுகாதாரத் துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி இளைஞர் பிரிவின் சார்பில் கேட்டுக் கொள்வதாக ஒரு மருத்துவருமான தமிழ் மாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.