Home நாடு அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் இரவு முழுவதும் சந்திப்பு!

அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் இரவு முழுவதும் சந்திப்பு!

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மிக முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 5) இரவு முழுவதும் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

நேற்று இரவு 9.30 மணி தொடங்கி இரவு 11.30 வரையில் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பு தலைநகர் தற்காப்பு அமைச்சில் நடைபெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரியால் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், நடப்பு அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஒப்புக் கொள்ளாத அம்னோ தலைவர்கள், அமைச்சர்கள், பெரும்பாலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அம்னோவில் தற்போது பெரிய அளவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. தேசியக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தருவதா அல்லது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதா என்பதுதான் அம்னோவின் இக்கட்டான நிலை.

இதில் அம்னோ தலைவர்கள் 2 விதமான நிலைப்பாட்டைக் கொண்டு பிளவுபட்டு நிற்கின்றார்கள்.

இந்தப் பிரச்சனையில் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இரண்டு தரப்புக்கும் இடையில் சமரசம் செய்யும் பேச்சாளராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

நேற்று தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்த பின்னர்  அம்னோ தலைவர்கள் கொண்ட மற்றொரு குழு புத்ரா உலக வாணிப மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்திற்கு சென்று அங்கு அதிகாரபூர்வமற்ற கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தற்போது அமைச்சர்களாக இருக்கும் இருவர் தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அம்னோவின் மூத்த தலைவர்களான துங்கு ரசாலி ஹம்சா, தாஜூடின் போன்றவர்கள் தேசியக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

தற்போது இருதரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஜூலை 26 முதல் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.