Home நாடு கொவிட்-19: மரண எண்ணிக்கை 125 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 972 பேர் –...

கொவிட்-19: மரண எண்ணிக்கை 125 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 972 பேர் – 16 பேர் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்

2072
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 13 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 125 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரையில் பதிவான மிக அதிகமான ஒருநாள் மரண எண்ணிக்கை இதுவாகும்.

அதே வேளையில் மேலும் 972 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மரண எண்ணிக்கை அதிக அளவில் தொடரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,385 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 52 பேர், பெண்கள் 50 பேர்.  மரணமடைந்தவர்களில் 14 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

மரணமடைந்தவர்களில் 67 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 58 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

மரணமடைந்தவர்களின் மூவர் 30 வயதுக்கும் குறைவான வயதுடையவர்கள் ஆவார்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 11,079

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை முதன் முறையாக 5 இலக்கத்தைக் கடந்து 11,079 ஆக அதிகரித்து நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 855,949 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 11,079 தொற்று சம்பவங்களில் 11,052 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 27 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,990 – ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 753,328 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 96,236 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 972 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 456 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நேற்று நள்ளிரவு வரையில் ஒரு நாளில் மட்டும் 421,479 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. மொத்தம் 11,788,189 தடுப்பூசிகள் இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 8.1 மில்லியன் முதலாவது தடுப்பூசியாகும். 3.7 மில்லியன் இரண்டாவது தடுப்பூசிகள் இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 5,263 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள்  சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,521 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 1,033 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.