Home உலகம் ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?

578
0
SHARE
Ad

தோக்கியோ : இன்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி பதக்கப் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

11 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 24 பதக்கங்களோடு சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

#TamilSchoolmychoice

12 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 21 பதக்கங்களுடன் 3-வது இடத்தை, ஒலிம்பிக்சை ஏற்று நடத்தும் விருந்துபசரிப்பு நாடான ஜப்பான் பிடித்திருக்கிறது.

4-வது இடத்தைப் பிடித்திருப்பது யார் தெரியுமா?

7 தங்கப் பதக்கங்களுடன், மொத்தம் 20 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்திருப்பது யார் என்பதுதான் சுவாரசியம்.

ரஷியா நாட்டு விளையாட்டாளர்கள்தான் அந்த 4-வது இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.

எனினும் ரஷியா என்ற நாட்டின் பெயரில் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. பெற்ற பதக்கங்களைப் பட்டியலிடவும் முடியவில்லை.

காரணம், ஊக்க மருந்து உட்கொள்ளப்படுவது தொடர்பில் ஒலிம்பிக்சில் கலந்து கொள்ள முடியாது என ரஷியா மீது 4 ஆண்டுகளுக்கான தடையை அனைத்துலக அளவிலான ஊக்க மருந்துக்கு எதிரான மன்றம் விதித்திருந்தது.

மேல்முறையீட்டைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டில் அந்தத் தடை இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இருந்தாலும் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகளில் ரஷியா பங்கேற்கத் தடை தொடர்கிறது.

இந்நிலையில் ஊக்க மருந்து விவகாரத்தில் சம்பந்தப்படாத ரஷிய விளையாட்டாளர்களை மட்டும் ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது அனைத்துலக ஒலிம்பிக் மன்றம். இருந்தாலும் அவர்கள் தங்களின் நாட்டைப் பிரதிநிதிக்க முடியாது, கொடியைப் பயன்படுத்த முடியாது. தங்கப் பதக்கம் வென்றாலும் பதக்கம் வழங்கப்படும்போது ரஷியாவின் தேசிய கீதமும் இசைக்கப்படாது.

இத்தகைய நிபந்தனைகள், தடைகளுக்கு இடையில், ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்காத 335 ரஷிய விளையாட்டாளர்கள் தோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ROC – அதாவது “Russian Olympic Committee.” – ரஷியன் ஒலிம்பிக் கமிட்டி – என்ற பெயரிலான குழுவாக அவர்கள் ஒலிம்பிக்சில் பங்கு பெறுகின்றனர். இன்றைய நிலையில் 20 பதக்கங்களுடன் அவர்கள்தான் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.