கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான “ஆணவம் மிக்க” தேசியக் கூட்டணி அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பக்காத்தான் ஹாராப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற நடைமுறை மூலம் அவசர கால சட்டங்களை இரத்து செய்ய, மாமன்னரின் ஆலோசனைப்படி முன்வராத மொகிதினின் அமைச்சரவை தனது ஆணவத்தைக் காட்டியுள்ளது. நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையும், மாமன்னருக்கு எதிராகவும், மலேசிய அரசியலமைப்பு சட்டத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் எதிரானதாக அமைந்திருக்கிறது என பக்காத்தான் தலைவர்கள் மன்றம் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
மொகிதினின் முழு அமைச்சரவையும், நாடாளுமன்ற அவைத் தலைவரும்,சட்டத்துறைத் தலைவரும் கௌரவமாகப் பதவி விலகுவதே அவர்கள் செய்திருக்கும் மாபெரும் தவறுக்கான ஒரே வழி என நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்ற அறிக்கை மேலும் தெரிவித்தது.
மாமன்னர் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசானை சாடி வெளியிட்ட அறிக்கை, அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதில் அறிக்கையைத் தொடர்ந்து மொகிதின் யாசின் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.