Home நாடு நாடாளுமன்றம் – திங்கட்கிழமையும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் – திங்கட்கிழமையும் ஒத்திவைப்பு

772
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) கடைசி நாளாக நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொவிட் தொற்று அபாயம் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றக் கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் அவசர கால சட்டம் தொடர்பாக எழுந்திருக்கும் பூகம்பத்தைத் தவிர்ப்பதற்கான அரசாங்கத்தின் உத்தி என அனைத்துத் தரப்புகளாலும் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற ஒத்தி வைப்புக்கான அறிவிப்பு நாடாளுமன்றச் செயலாளர் நிசாம் மைடின் பாச்சாவால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று சனிக்கிழமை (ஜூலை 31)அனுப்பபட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றுகளினால் இந்த ஒத்திவைப்பை சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் பரிந்துரைத்துள்ளார் எனவும் அந்த அறிவிப்பு தெரிவித்தது.

தொற்றுகளின் அபாயத்தால் தற்போது நாடாளுமன்றம் அதிக கொவிட் அபாயம் நிறைந்த வளாகமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவல்களை நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாக நாடாளுமன்றச் செயலாளர் நிசாம் மைடின் பாச்சா தெரிவித்திருக்கிறார்.

3 முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வியாழக்கிழமை (ஜூலை 29) மாமன்னரின் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் அமளியாகியது. அதைத் தொடர்ந்து அன்று மூன்று முறை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அன்று நாடாளுமன்றம் நடைபெறவே இல்லை.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் கூட்டமும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

வியாழக்கிழமை (ஜூலை 29) காலையில் வெளியிடப்பட்ட மாமன்னர் அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் அன்று பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு முரணாக நடந்து கொண்டனர் என்றும் என்னை அவமதித்து விட்டனர் என்றும் மாமன்னர் கடுமையான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை காலையில் விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்க வேண்டிய நாடாளுமன்றக் கூட்டம் ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அசார் அசிசான் அறிவித்தார்.

3.30 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது நாடாளுமன்ற பணியாளர்கள் இருவருக்கு கொவிட் தொற்று கண்டிருப்பதாகவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொவிட் பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவையின் துணைத் தலைவர் ஹாஸ்னோன் அறிவித்தார்.

மீண்டும் மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், மீண்டும் 5.15 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் முழுமையாக ஒத்திவைக்கப்படுவதாக ஹாஸ்னோன் அறிவித்தார்.

வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற முகமட் ரஷிட் ஹாஸ்னோன், நாடாளுமன்ற பணியாளர்கள் இருவருக்கு கொவிட் தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருப்பதாகவும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் மீது கொவிட் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அதற்கு ஏதுவாக மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஹாஸ்னோன் அறிவித்து விட்டு நாடாளுமன்ற அவையிலிலிருந்து வெளியேறினார்.

மீண்டும் 5.15 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது கொவிட் தொற்று காரணமாக நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது அந்தக் கூட்டமும் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.