புத்ரா ஜெயா : பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான அகமட் பைசால் அசுமு பிரதமர் மொகிதின் யாசினின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொகிதின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டபூர்வமான அரசாங்கம் அல்ல என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய நியமனம் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அசுமு தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராவார். பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும் ஆவார். பேராக் மாநில பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.
சமூக பொருளாதார மேம்பாடு, சமூகங்களுடனான உறவுகள், சமூகங்களுடனான தகவல் தொடர்புகள் ஆகிய விவகாரங்களில் அவர் பிரதமருக்கு ஆலோசனை வழங்குவார் என பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்தது.
மொகிதின் யாசின் அமைச்சரவையில் இருந்து இதுவரையில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பதவி விலகியுள்ளார். எரிசக்தி, இயற்கை வளம் அமைச்சராகப் பொறுப்பு வகித்த அம்னோவைச் சேர்ந்த ஷாம்சுல் அனுவார் நசரா செவ்வாய்க்கிழமையன்று பதவி விலகினார்.
அவருக்குப் பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய பொறுப்பு இப்போது அசுமுவுக்கு வழங்கப்பட்டது.