Home நாடு உணவகங்கள் : வருமானம் இன்றி உரிமையாளர்கள் வட்டி முதலைகளிடம் சிக்கியுள்ளனர்

உணவகங்கள் : வருமானம் இன்றி உரிமையாளர்கள் வட்டி முதலைகளிடம் சிக்கியுள்ளனர்

947
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த 18 மாதங்களாக போதிய வருமானம் இல்லாமல், உணவக உரிமையாளர்கள் வட்டி முதலைகளிடம் சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் மாதந்தோறும் பல்லாயிரக் கணக்கான ரிங்கிட்டை செலவு செய்ய வேண்டிய நெருக்கடியிலும் சிக்கியிருக்கிறார்கள் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க (பிரிமாஸ்) தலைவர் ஜே.  சுரேஷ் (படம்) வேதனையை வெளிப்படுத்தினார்.

“மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் கடந்த ஒன்றரை வருடமாக வியாபாரம் இல்லாமல் வருமானமும் பாதிக்கப்பட்டு பெருந் துன்பத்திற்கு ஆட்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக, வட்டி முதலைகளிடம் கடன் பெற்று மேன்மேலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்” என்றும் சுரேஷ் மேலும் கூறினார்.

உணவக உரிமையாளர்கள் தொழில் செய்தாலும் இல்லாவிட்டாலும் பல்லாயிரக் கணக்கில் வாடகைத் தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டி இருக்கிறது. அத்துடன், தொழிலாளர்களுக்கு தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் அதையும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை எங்கள் அங்கத்தினர்கள் கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“அறவே வருமானம் இல்லாமல் இப்படி மாதந்தோறும் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதனால், சமாளிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் பிரிமாஸ் உறுப்பினர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை நாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கும் பலமுறை கொண்டு சென்றுள்ளோம். தற்காலிக நிவாரணமாக நிதியுதவி கோரினாம். ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்றும் சுரேஷ் தங்களின் பிரச்சனையை அறிக்கை ஒன்றின் மூலம் எடுத்துரைத்திருக்கிறார்.

“அத்துடன் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடியால் எங்கள் பிரச்சினையை சீர்தூக்கிப் பார்க்கவும் உணவக உரிமையாளர்களுக்கு உதவி செய்யவும் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உணவகத் தொழில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றது. குறிப்பாக சுற்றுலாத் துறைக்கும் உணவு உற்பத்தித் துறைக்கும் அடித்தளமாக இருப்பது உணவகத் தொழில்தான். அப்படி இருந்தும் எங்களின் சிக்கலைக் களைய ஒரு தரப்பிலும் அக்கறைக் காட்டப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உணவக உரிமையாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். ஏதோ ஓரிரு மாதங்கள் என்றால் நெருக்கடியை சமாளிக்கலாம். ஒன்றரை வருடங்களாக உணவகத்தை மூடி வைத்துக் கொண்டு செலவு செய்வதென்றால் இது கைமீறிய காரியமாக உள்ளது” என்றார் சுரேஷ்.

“கொரோனா பரவலைத் தடுக்கவும் மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கும் உணவகங்களை மூட வேண்டியது அவசியம்தான். ஆனால், மாதந்தோறும் பல்லாயிரக் கணக்கில் நட்டத்தை எதிர்கொள்வதென்றால் முடியவில்லை. இதனால், தவிர்க்க முடியாமல்தான் அதுவும் கடுமையான வட்டி விகிதத்திற்கு கடன்பெற்று மேலும் மேலும் துன்பத்தை அனுபவிக்கும் நெருக்கடிக்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியக் கூட்டரசு தீர்வு காண வேண்டும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுரேஷ் மேலும் தெரிவித்திருக்கிறார்.