டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நாட்டின் 9-வது பிரதமராக நியமனம் பெற்றிருப்பதை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை
அம்னோவின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை நாட்டின் 9-வது பிரதமராக, மாமன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) இஸ்மாயில் சாப்ரி மாமன்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
இதுவரை நடந்து வந்த அரசியல் குழப்பங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இஸ்மாயில் சாப்ரியை நான் அனைவரும் திறந்த மனதுடன் கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இரு கரம் சேர்த்து வரவேற்போம்.
நாடும் மக்களும் இந்தத் தருணத்தில் எதிர்நோக்கியிருக்கும் கடுமையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நாம் அனைவரும் நமது ஆற்றலையும், கவனத்தையும் ஒருமுகப்படுத்தி பணியாற்ற வேண்டிய தருணம் இது.
எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என இந்த வேளையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற மேலவையிலும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரே குழுவாகப் பாடுபட்டு புரிந்துணர்வோடு, செயல்படுவோம் என முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறைகூவல் விடுத்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கையை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் மொகிதின் யாசின் பதவி விலக நேர்ந்தது. அதைத் தொடர்ந்தே இஸ்மாயில் சாப்ரி பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். நாம் கொவிட் தொற்று பாதிப்பை பெரிய அளவில் எதிர்நோக்கி வரும் இந்த காலகட்டத்தில் அரசியல் நிலைத்தன்மையில்லாத சூழ்நிலை நமது செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொவிட்-19 தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்திலும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மீட்சித் திட்ட முன்னெடுப்புகளிலும் அரசியல் நிலைத்தன்மை இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் மீட்சித் திட்டம் என்பது சுலபமான ஒன்றல்ல. அது வெற்றியடைவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும், தியாகங்களும் இன்றியமையாதவையாகும்.
நமது எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். பிரதமராகத் தேர்வு பெற்றுள்ள இஸ்மாயில் சாப்ரி கொவிட்-19 தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தை அரசாங்கத் தலைவராகவும், எதிர்க்கட்சிகளின் ஆதரவோடும் தொடர அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தங்களின் சொந்த அரசியல் நலன்கள், அரசியல் கொள்கைகள் ஆகியவற்றை தற்போதைக்கு ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, கொவிட்-19 தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என மாமன்னர் விடுத்திருக்கும் அறிவுரையை அனைவரும் ஏற்று செயல்பட வேண்டும்.
இந்த காலகட்டத்தில் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் நாடு கடுமையான பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் காலகட்டத்தில் பொருத்தமான ஒன்றாகும். காரணம், அவர் நிறைந்த அனுபவம் வாய்ந்தவர். அம்னோவின் உதவித் தலைவராகவும் இருப்பவர். அரசாங்க நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவர் இஸ்மாயில் சாப்ரி. பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மூத்த அமைச்சராகவும் செயல்பட்டு கொவிட்-19 தொடர்பான அறிவிப்புகளை தினசரி தெளிவாகவும், விரிவாகவும் சுமார் 17 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தவர். துணைப் பிரதமராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
அவரைப் பிரதமராக நியமிக்கும் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷாவின் முடிவை மஇகா முழுமனதுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது.
இவர் திறமையானவரா, இவரை விட அவர் திறமையானவரா, யார் சரி, யார் செய்தது தவறு என்பது போன்ற விவாதங்களில் இனியும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைத்து, மக்கள் நலன் காக்கும் ஒருங்கிணைந்த ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் பாடுபடுவோம்.
முதலில் அத்தகைய வாய்ப்பை புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் தலைமைத்துவத்திற்கு வழங்குவோம். கொவிட் தொற்றுகளின் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்போம். மற்றவற்றைப் பின்னர் பார்த்துக் கொள்வோம்.
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்