கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த புதிய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சேர்க்கை டான்ஸ்ரீ நோ ஓமார் (படம்) வணிக முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நோ ஓமார் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். தஞ்சாங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர்.
இவரை நியமித்திருப்பதன் மூலம் சிலாங்கூரில் அம்னோவையும், தேசிய முன்னணியும் பலப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அம்னோவையும், தேசிய முன்னணியையும் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும் மாநிலம் சிலாங்கூர். நாட்டின் பணக்கார மாநிலமும் இதுவே! அதிகமான மக்கள் தொகை, அதிகமான தொழிற்சாலைகள் என பல முனைகளிலும் நாட்டின் முதன் மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர்.
எனினும் 2008 வரை அம்னோவும்-தேசிய முன்னணியும் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்த மாநிலம் 2008-இல் பிகேஆர் தலைமையிலான பக்காத்தான் கூட்டணி வசம் சென்றது.
அப்போது முதல் இப்போது வரை 3 பொதுத் தேர்தல்ளிலும் இந்த மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற முடியாமல் அம்னோ-தேசிய முன்னணி தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இப்போது, நோ ஓமாரின் நியமனம் மூலம் அரசியல் ரீதியாக இந்த மாநிலத்திற்குள் ஊடுருவ அம்னோ ஆயத்தமாகி வருகிறது. அவரை அமைச்சராக நியமித்திருப்பதன் மூலம் ஏற்கனவே, சிலாங்கூர் மாநில அம்னோ தலைவராகத் திகழும் அவரை பலப்படுத்தியிருக்கிறது அம்னோ.
தனது அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு சிலாங்கூர் மாநிலத்தில் அம்னோவின் ஆதரவு பலத்தை நோ ஓமார் வலுப்படுத்துவாரா என்பதைக் காண அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.