Home நாடு சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி சரவாக்கைத் தற்காக்க முடியுமா?

சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி சரவாக்கைத் தற்காக்க முடியுமா?

560
0
SHARE
Ad

கூச்சிங் : எல்லா அரசியல் கட்சிகளும் 18 வயது வாக்காளர்களைக் கண்டு பயப்படுகிறார்கள் போலும்! ஜனவரி 2022 முதற்கொண்டு 18 வயது கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு முன்கூட்டியே சரவாக் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சரவாக் சட்டமன்றத்திற்கான தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டிய வாக்குப் பதிவு டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சாலே இன்று அறிவித்தார்.

சரவாக் தேர்தலுக்கு 12 நாட்கள் பிரச்சாரத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சரவாக் தேர்தலில் 1.25 மில்லியன் வாக்காளர்கள் பங்கெடுப்பார்கள்.1.23 மில்லியன் பேர் சாதாரண வாக்காளர்களாவர். 12,585 இராணுவத்தினரும் அவர்களின் மனைவிகளும், 10,458 காவல் துறையினரும் அவர்களின் மனைவிகளும் இந்த தேர்தலில் வாக்களிப்பர்.

70 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவர் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கப்படுகிறது.

346 வாக்களிப்பு மையங்களில் காலை 7.30 தொடங்கி மாலை 5.00 மணிவரை வாக்களிப்பு, 30 நிமிட கூடுதல் நேர நீட்டிப்புடன் நடைபெறும். 1,520 வாக்களிப்பு மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின்படி வாக்களிப்பு நடைபெறும்.

சரவாக் தேர்தலை நடத்த சுமார் 150 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும்.

ஜிபிஎஸ் சரவாக்கைத் தற்காக்க முடியுமா?

சரவாக்கைத் தற்போது ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமாகத் தற்காத்துக் கொள்ளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சரவாக்கின் அனைத்து 82 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. பக்காத்தானுடன் இணைந்து களம் காணப் போகும் மற்ற கட்சிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை.

2016 சரவாக் தேர்தலுக்கும், இந்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்போது சரவாக் தேசிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட 82 தொகுதிகளில் 72 தொகுதிகளை அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அந்தக் கூட்டணிக்கு அப்போதை முதலமைச்சர் அட்னான் சாத்திம் தலைமையேற்றிருந்தார்.

எஞ்சிய 10 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பான் கைப்பற்றியது.

இந்த முறை தேசிய முன்னணி முற்றாக உடைந்து விட்டது. சரவாக் மாநில கட்சிகள் இணைந்து ஜிபிஎஸ் (காபுங்கான் பார்ட்டி சரவாக்) என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்திருக்கின்றன. அதில் உள்ள எல்லாக் கட்சிகளும் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறிவிட்டன. இன்றைக்கு சரவாக் தேசிய முன்னணி என்ற ஒன்றே இல்லை.

எனவே, ஜிபிஎஸ் கூட்டணிக்கும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் போட்டியில் வெல்லப் போவது யார் என்ற சுவாரசியக் கேள்வி எழுந்துள்ளது.

ஜிபிஎஸ் கூட்டணி வெல்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், பக்காத்தான் கூட்டணி எத்தனை சட்டமன்றங்களை வெல்ல முடியும் என்பதும் எதிர்பார்க்கப்படும் ஒரு கேள்வியாகும்.