Home நாடு “4 மொழிகளில் கற்பிப்பதே அரசாங்கத்தின் கொள்கை” – அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

“4 மொழிகளில் கற்பிப்பதே அரசாங்கத்தின் கொள்கை” – அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

1419
0
SHARE
Ad
நீதிபதி முகமட் நஸ்லான்

கோலாலம்பூர் : தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழியே மைய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதது மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் சில மலாய் அமைப்புகள் தொடுத்திருக்கும் வழக்கின் விசாரணை நேற்று புதன்கிழமை (நவம்பர் 24) நீதிபதி முகமட் நஸ்லான் முன்னிலையில் தொடர்ந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட எஸ்.நற்குணவதி தனது வாதங்களை நேற்றைய விசாரணையில் சமர்ப்பித்தார்.

“மலேசிய கல்விக் கொள்கையானது மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் கற்பிக்கப்படுவதற்கு வழி செய்கிறது.  மேலும் வழக்கைத் தொடுத்தவர்களின் வழக்கறிஞரான ஹானிப் கத்ரி மலேசிய அரசியலமைப்புச் சட்டவிதி 152-ஐ முழுமையாக விளக்கத் தவறிவிட்டார். மலேசியக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது, 1956-ஆம் ஆண்டு ரசாக் அறிக்கை, 1960-ஆம் ஆண்டு ரஹ்மான் தாலிப் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலானது என்பதையும் ஹானிப் கத்ரி விளக்கவில்லை” எனவும் நற்குணவதி வாதிட்டார்.

தீர்ப்பு டிசம்பர் 29-ஆம் தேதி

#TamilSchoolmychoice

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி முகமட் நஸ்லான் தனது தீர்ப்பை எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வழங்கப் போவதாக அறிவித்தார்.

கோபால் ஸ்ரீராமின் வாதம்

கோபால் ஸ்ரீராம்

சீன, தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மைய மொழியாக சீனம், தமிழ் மொழி அகற்றப்பட்டு மலாய் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என சில மலாய் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்த வழக்கை எதிர்க்கும் பிரதிவாதிகளைப் பிரதிநிதித்து கோபால் ஶ்ரீராம் வழக்கறிஞராகச் செயல்படுகிறார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் இயங்குவது மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி என்பதால், அவற்றின் மீதான முடிவுகளை நாடாளுமன்றமே சட்டத்திருத்தங்கள் மூலமே எடுக்க முடியும் – மாறாக நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என ஶ்ரீராம் எதிர்வழக்காடினார்.

தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (Gabungan Pelajar Melayu Semenanjung -GPMS), மலேசிய இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி மன்றம் (Majlis Pembangunan Pendidikan Islam Malaysia – Mappim), தேசிய எழுத்தாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Coalition of National Writers’ Associations – Gapena) ஆகிய 3 இயக்கங்களும் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.

மலேசிய அரசாங்கத்திற்கும், கல்வி அமைச்சுக்கும் எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பின்னர் இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட 11 மற்ற தரப்புகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மலேசிய சீனமொழி மன்றம், மசீச, மஇகா, கெராக்கான், புத்ரா ஆகிய கட்சிகள், சீனமொழி கல்வி அமைப்புகளான டோங் சோங்,(Dong Zhong) ஜியாவ் சோங் (Jiao Zong), தாய்மொழிப் பள்ளிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தாய்மொழிப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஆகியவைவே இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அமைப்புகளாகும்.

ஹானிப் காத்ரியின் வாதம்

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன்னிலையில் தொடங்கிய இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட இயக்கங்களைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் ஹானிப் காத்ரி தனது வாதங்களைச் சமர்ப்பித்தார்.

வழக்கறிஞர் ஹானிப் காத்ரி

தற்போதுள்ள நிலைமை சீன, தமிழ்ப் பள்ளிகளில் தொடர்ந்தால், அவற்றில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் போதிய தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார்கள் – எனவே அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் போதிய அளவில் கிடைக்காது என ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கௌரவமான பல உரிமைகளை சீன, தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் இழக்க நேரிடும், அவர்களுக்கு அரசாங்க சேவைகளில் வேலை வாய்ப்புகளும் கிடைக்காது எனவும் ஹானிப் காத்ரி மேலும் குறிப்பிட்டார்.

தன் வாதத்தை வலியுறுத்தும் சில ஆவணங்களையும் ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.