கோலாலம்பூர் : தைப்பூசத்திற்கு முதல் நாள் நிச்சயமாக கோலாலம்பூரிலிருந்து பத்துமலையை நோக்கி வெள்ளி இரதம் புறப்படும் என்று டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் இது குறித்து நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) நடைபெறும் அமைச்சரவையில் பேசுவேன் என்றும் டத்தோ ஸ்ரீ சரவணன் உறுதியளித்தார்.
இது தவிர, இரதம் புறப்படுகையில் எத்தனை பேர் உடன் செல்லலாம்; எந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு; எந்த வகையில் நாம் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடலாம்; என்று தேசியப் பாதுகாப்பு மன்றத்துடன் கலந்தாலோசித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சரவணன் கூறினார்.
“நம்முடைய தேசிய சுகாதார பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படாமல், அதே வேளையில் நமது பாரம்பரியமான, பக்தி மணம் கமழும் தைப்பூசத் திருநாள் முறையாக நடைபெறுவதை நான் உறுதிசெய்வேன்” என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினார் மனிதவள அமைச்சருமான சரவணன்.
மேலும் அவர் கூறுகையில், “நாடு முழுவதும் தற்போது தைப்பூசத் திருநாளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அதற்கு முன்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் வரிசையில் நிற்பதால், இப்பொழுது உடனடியாக தைப்பூசம் குறித்து அவசரமான முடிவுகள் எடுக்கத் தேவையில்லை. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும்” எனவும் சரவணன் கேட்டுக் கொண்டார்.
“அதுமட்டுமல்ல! இந்த விழாக் காலங்களில் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பாதுகாப்பாக இருந்தால் தான் கொரோனா தொற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். தொற்று குறையாமல் நாம் பழைய நடைமுறைக்குச் செல்ல வாய்ப்பில்லை. எனவே அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதும், வெளி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதும் மிக மிக அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“வதந்திகளையும், ஆருடங்களையும் யாரும் பரப்ப வேண்டாம். தைப்பூசத் திருநாள் இறைவனின் அருளால் புதிய நடைமுறையில் நிச்சயம் நடைபெறும். முருகனின் அருள் அனைவருக்கும் கிட்டும்” என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.