Home உலகம் உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)

875
0
SHARE
Ad
ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

(உக்ரேன்– ரஷ்யா இடையிலான போர் தொடங்கிவிட்டது. இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வரலாற்றுப் பின்னணிகள் என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் நீண்ட காலம் இருந்த நாடு உக்ரேன்
  • 1991-இல் சுதந்திரம் பெற்றாலும் தொடர்ந்து உள்நாட்டுக் கலவரங்கள்
  • கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஏன் 2014-இல் கைப்பற்றியது?

அண்மைய சில வாரங்களாக எல்லா ஊடகங்களிலும் நாள்தோறும் “உக்ரேன்- ரஷ்யா எல்லைகளில் மோதல்-இரு நாடுகளுக்கிடையில் போர் நிகழுமா?-நேட்டோ கூட்டணி – என்பது போன்ற வார்த்தைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இப்போதோ நேரடிப் போரே மூண்டு விட்டது.

இந்த இரு நாடுகளுக்கிடையில் அப்படி என்னதான் பிரச்சினை? ஏன் மோதல்கள் உருவாகின? அதற்கான வரலாற்றுப்  பின்னணி என்ன?

ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த  நாடுகளில் ஒன்றாகத்  திகழ்ந்த உக்ரேன்

10ஆம்,11ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தின்  மிகப் பெரிய நாடாகவும்  வலிமை வாய்ந்த ஆட்சியாகவும் திகழ்ந்தது உக்ரேன்.

#TamilSchoolmychoice

அப்போது கிவியன் ரஸ் (Kyvian Rus) என்ற பெயரில் இந்நாடு அழைக்கப்பட்டது. அடுத்து வந்த நூற்றாண்டுகளில் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.

18ஆவது நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ரஷ்யப் பேரரசு உக்ரேனின்  பெரும்பான்மையான பிரதேசங்களை தன் வசப்படுத்திக் கொண்டது.

1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ட்ஸார்  (Tzar)ஆட்சி ரஷ்ய கம்யூனிசப் புரட்சியால் வீழ்ச்சி அடைந்தது. அந்த காலகட்டத்தில் 1917 முதல் 1920 வரை குறுகிய கால சுதந்திரத்தைப் பெற்றது உக்ரேன்.

ஆனால், அந்த சுதந்திர நிலைமை நீடிக்கவில்லை. மீண்டும் சோவியத் ரஷ்யா  உக்ரேனை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சியை நடத்தியது. ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இரண்டு பஞ்சகாலங்கள் ஏற்பட்டு எட்டு மில்லியன் வரையிலான  மக்கள் மடிந்தனர்.

அதைத் தொடர்ந்து 2ஆம் உலக யுத்தத்திலும் ஜெர்மன் – சோவியத் ரஷ்ய படைகள் தாக்குதல்களினால் ஏழு முதல் எட்டு  மில்லியன் வரையிலான  உக்ரேன் மக்கள் மாண்டனர்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ்  அடங்கிக் கிடந்த நாடுகளில் ஒன்றாக உக்ரேன் இருந்து வந்தது.

அதன் காரணமாகவும், கம்யூனிச ஆட்சி முறையினாலும் நாட்டில் பொருளாதார வளர்ச்சி எதுவும் பெரிய அளவில் ஏற்படவில்லை.

1991ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யா உடைந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர்  மிக்காயில் கோர்பாசேவ் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரேகன் இடையிலான புரிந்துணர்வு காரணமாக சோவியத் ரஷ்யாவின் கீழ் இருந்த நாடுகள் சுதந்திரம் பெற்றன.

கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி என இரண்டாகப் பிரிந்து கிடந்த ஜெர்மனியும் ஒன்றாக இணைந்தன.

அந்த இருநாடுகளையும் பிரித்து வைத்த பெர்லின் தடுப்புச்சுவர் உடைத்து  நொறுக்கப்பட்டது.

அப்போது சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள் மெல்ல  மெல்ல முன்னேற்றம் கண்டாலும், உக்ரேன் இன்னும் பல வகைகளில் ரஷ்யா கொடுத்து வரும் தொல்லைகளால் பின்தங்கி இருக்கிறது.

சுதந்திர உக்ரேன் நாட்டில் அடுத்தடுத்து உள்நாட்டுக் கலவரங்கள் நிகழ்ந்தன.  அவற்றில் பெரும்பாலானவை ரஷ்யாவின் தூண்டுதலால் ஏற்பட்டவை.

2013ஆம் ஆண்டில் மிகப் பெரிய  அளவிலான மாணவர் போராட்டம் நிகழ்ந்து,  மக்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் உக்ரேன் தலைநகர் கீவ் நகரின் மத்திய சதுக்கத்தில் குந்தியிருப்புப் போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் மரணமடைந்தனர். அனைத்துலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து அப்போதைய உக்ரேன் அதிபர் யானகோவிச் 2014 பிப்ரவரியில் நாட்டை விட்டு வெளியேறினார்.

அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு மே 2019 முதல்  வோலோடிமிர்  ஸெலென்ஸ்கி அதிபராக பதவி வகித்து வருகிறார்.

2014ஆம் ஆண்டில் உக்ரேனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதன்  தீபகற்பப் பகுதியான கிரிமியா பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றியது.

கிரிமியா பிரதேசத்தை ரஷ்யா ஏன் கைப்பற்றியது? எப்படி கைப்பற்றியது? என்பதிலும் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. அதை அடுத்துப் பார்ப்போம்.

-இரா.முத்தரசன்

அடுத்து :

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 2)

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 2)