Home நாடு ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 5 : மூடாவின் அமிரா போட்டியிடும் புத்ரி வாங்சா

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 5 : மூடாவின் அமிரா போட்டியிடும் புத்ரி வாங்சா

662
0
SHARE
Ad

(புத்ரி வாங்சா தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • ஜோகூர் தேர்தலில் மூடா போட்டியிடும் 7 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
  • அமானா, மூடாவுக்காக பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் விட்டுக்
    கொடுத்த தொகுதி
  • 6 முனைப் போட்டியை எதிர்நோக்கும் புத்ரி வாங்சா

புத்ரி வங்சா தொகுதியில் போட்டியிடும் அமிரா அய்ஷா மலேசிய அரசியல்
அரங்கில் அவ்வளவாகப் பிரபலமானவர் இல்லை. இந்தத் தேர்தல்தான் அவர்
போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தலும்கூட!

இருந்தாலும் ஜோகூரின் மற்ற தொகுதிகளோடு ஒப்பிடும்போது புத்ரி வங்சா
தொகுதியே பிரதானமாகப் பேசப்படுகிறது – ஊடகங்களில் அதிகமாக அடிபடுகிறது. அதன் பின்னணிக் காரணங்களை ஆராய்ந்தால் நட்சத்திரத் தொகுதியாக புத்ரி வங்சா ஏன் உருவெடுத்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

அமானா, மூடாவுக்கு விட்டுக்கொடுத்த தொகுதி

#TamilSchoolmychoice

2018 பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில்
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மஸ்லான் பின் பூஜாங் போட்டியிட்டு
24,959 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார். பின்னர் பெர்சாத்து
உடைந்தபோது மொஹிதின் யாசின் பக்கம் சாய்ந்தார் மஸ்லான். கடந்த ஜனவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்தே வெளியேறியிருக்கிறார் மஸ்லான்.

2018 பொதுத் தேர்தலில் 50 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 39 விழுக்காடு
மலாய் வாக்காளர்களையும் 10 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும்
இத்தொகுதி கொண்டிருந்தது. மற்ற இன வாக்காளர்கள் 1 விழுக்காடு மட்டுமே.

தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்று புத்ரி
வங்சா. மற்றொரு தொகுதி தீராம்.

இந்த முறை புத்ரி வங்சா, பக்காத்தான் கூட்டணி உடன்பாட்டின்கீழ் அமானாவுக்கே
வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் மூடாவுக்கும் பக்காத்தான் கூட்டணி
கட்சிகளான ஜசெக, அமானா கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தேர்தல்
உடன்பாட்டினால் – மூடாவுக்கு அமானா விட்டுக்கொடுத்த 4 தொகுதிகளில் ஒன்று
புத்ரி வங்சா. தெனாங், புக்கிட் கெப்போங், பாரிட் ராஜா ஆகிய மூன்றும்
அமானா மூடாவுக்காக விட்டுக் கொடுத்த மற்றத் தொகுதிகளாகும்.

மாச்சாப், புக்கிட் பெர்மாய் தொகுதிகளை ஜசெக மூடா விட்டுக் கொடுத்தது.
ஆக, இந்த 2 கட்சிகளும் விட்டுக் கொடுத்திருக்கும் 6 தொகுதிகளில் மூடா
போட்டியிடுகிறது.

எனினும் மூடாவுக்கும், பிகேஆர் கட்சிக்கும் இடையில் நிலவி வரும்
பூசல்களைப் பெரிதாக்கும் வண்ணம் லார்க்கின் தொகுதியில் 7 முனைப்
போட்டியில் பிகேஆர் – மூடா இரண்டும் மோதிக் கொள்கின்றன.

மூடாவுக்காக ஜசெகவும், அமானாவும் சேர்ந்து 6 தொகுதிகளை
விட்டுக்கொடுத்தாலும், பிகேஆர் ஒரு தொகுதி கூட விட்டுக் கொடுக்கவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் பிகேஆர் வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர்.

தொகுதிகளை விட்டுக் கொடுக்காத பிகேஆர் கட்சி

மூடாவைத் தங்களுடன் இணைத்துக் கொள்வதால், கூடுதல் இளைய சமுதாய வாக்குகளைப் பெற முடியும் – தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என ஜசெக, அமானா கட்சிகள் வாதிடுகின்றன.

இந்த வாதத்தை பிகேஆர் கட்சி ஏற்கவில்லை. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றைக்கூட மூடாவுக்கு விட்டுக் கொடுக்க பிகேஆர் முன்வரவில்லை.

அமானா விட்டுக் கொடுத்திருக்கும், புத்ரி வங்சா தொகுதியில் போட்டியிடும் அமிரா அய்ஷா, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவர். அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளரும்கூட.

மூடா தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஜோகூர் தேர்தலில்
போட்டியிட முன்வராத நிலையில், மூடா கட்சியின் சார்பில் போட்டியிடும்
உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவராக அமிரா திகழ்கிறார்.

6 முனைப் போட்டியில் புத்ரி வங்சா

மற்ற தொகுதிகளைப் போல் அல்லாமல் 6 முனைப் போட்டி நிகழ்வதும் புத்ரி வங்சா
அனைவராலும் கவனிக்கப்படுவதற்கான இன்னொரு காரணமாகும். தேசிய முன்னணி சார்பில் மசீசவின் இங் இயூ எய்க், பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக
கெராக்கானின் லோ கா யோங், பெஜுவாங் கட்சியின் சார்பாக டாக்டர் கைரில்
அன்வார் ரஸாலி ஆகியோர் இந்தத் தொகுதியைக் குறிவைத்துத் தீவிரப்
பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியின்
சார்பில் ஸ்டீவன் சூங் போட்டியிடுகிறார். சுயேச்சை ஒருவரும்
போட்டியிடுகிறார்.

கடந்த பொதுத்தேர்தலில் 62,347 வாக்காளர்கள் இத்தொகுதியில் இருந்தனர்.

இந்த முறை 112,804 என வாக்காளர்களின் எண்ணிக்கை அதிரடியாக
உயர்ந்திருக்கிறது. சுமார் 50,000 வாக்காளர்கள் இத்தொகுதியில் மட்டும்
அதிகரித்திருக்கின்றனர். இந்தத் தொகுதி பரபரப்பாகப் பார்க்கப்படுவதற்கு
இதுவும் ஒரு காரணம்.