Home நாடு ஜோகூர்: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 7 : மூடா – பிகேஆர் மோதும்...

ஜோகூர்: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 7 : மூடா – பிகேஆர் மோதும் லார்க்கின்

499
0
SHARE
Ad

(லார்க்கின் தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஏன்? அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • பிகேஆர்-மூடா இரண்டு கட்சிகளும் ஜோகூர் தேர்தலில் மோதும் ஒரே தொகுதி லார்க்கின்
  • கடந்த முறை பெர்சாத்து வெற்றி பெற்ற தொகுதி
  • மீண்டும் பக்காத்தான் ஹாரப்பான் வசமாகுமா? அல்லது எதிர்க்கட்சிகளின் மோதல்களினால் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடுமா?

லார்க்கின் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிரபல்யங்கள் யாரும் இல்லை. நட்சத்திர அந்தஸ்து கொண்ட அரசியல்வாதிகளும் யாரும் இல்லை. பின் ஏன் ஜோகூர் தேர்தலில் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக லார்க்கின் பார்க்கப்படுகிறது?

ஜோகூர் தேர்தலில் பிகேஆர் – மூடா, 2 கட்சிகளும் மோதும் ஒரே தொகுதி இது என்பதால்தான்!

#TamilSchoolmychoice

ஒரு பக்கம் பிகேஆர் முக்கிய அங்கம் வகிக்கும்  பக்காத்தான் கூட்டணியோடு தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு – அவர்களிடமிருந்து  ஆறு தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு – இன்னொரு   பக்கம் அதே பிகேஆர் கட்சியுடன் லார்க்கின் தொகுதியில் மோதுகிறது மூடா கட்சி.

ஜோகூர்   மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சிக்கும் மூடா கட்சிக்கும் இடையில் நேரடி மோதல் நிலவும் ஒரே தொகுதி லார்க்கின். மூடாவின் இந்த முடிவு குறித்து முதலில் பிகேஆர் கட்சியில் சலசலப்புகள் எழுந்தன.

மூடாவுடன் தேர்தல் உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என நெருக்குதல்களும் பிகேஆர் கட்சியில் எழுந்தன.

லார்க்கின் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டாக்டர் சாமில் நஜ்வா

இருந்தாலும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரத்தில் அடக்கி வாசித்தார். நேரடி மோதல்களை மூடாவுடன் தவிர்த்தார். இது ஒரு தேர்தல் வியூகமாகத்தான் பார்க்கப்பட்டதே தவிர, மூடா மீது பிகேஆர் கட்சி கொண்டிருந்த பாசத்தால் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜோகூர் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து,  பிகேஆர்-மூடா இடையிலான மோதல்கள் மீண்டும் வலுக்கலாம்.

இந்த விவகாரத்தை இப்போதைக்குப் பெரிதுபடுத்தாமல் கண்ணியமாக ஏற்றுக் கொண்டுவிட்டது பிகேஆர். தங்களின் இந்த முடிவுக்காக மூடா கட்சி கொடுத்திருக்கும்  விளக்கம் வேறுவிதமானது.

நாங்கள் பக்காத்தான் கட்சியினர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில்தான் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டோமே தவிர அவர்கள் வெற்றி பெற்றத் தொகுதிகளை நாங்கள் கோரவில்லை.

அந்த முறையில் கடந்த தேர்தலில் லார்க்கின் தொகுதியில் பிகேஆர் கட்சி இந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை. பெர்சத்து கட்சிதான் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதி இந்த முறை  பாக்காத்தான் தேர்தல் உடன்பாட்டின் கீழ் பிகேஆர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பிகேஆர் கட்சி போட்டியிட்டு வெற்றி  பெறாத தொகுதி என்பதால்தான் நாங்கள் இங்கு போட்டியிடுகிறோம் என மூடா கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.

பிகேஆர் கட்சியோடு முரண்பாடு கொண்டு  மூடா துணிந்து போட்டியிட இங்கு முன்வந்திருப்பதால்தான் இந்தத் தொகுதி அனைவராலும் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.

ஆறு முனைப் போட்டி நிகழும் லார்க்கின்

லார்க்கின் தொகுதியில் ஆறு முனைப் போட்டி நிகழ்கிறது. தேசிய முன்னணி சார்பாக  முகமட் ஹைரி பின் மாட் ஷா, பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக ஷுல்கிப்ளி பூஜாங், பெர்ஜுவாங் கட்சி சார்பாக முகமட்  ரியாட்ஸ் பின்
முகம்மட் ஹாஷிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிகேஆர் சார்பாக டாக்டர் ஷாமில் நாஜ்வா போட்டியிட மூடா கட்சியின் சார்பில் ரஷிட் அபு பாக்கார் போட்டியிடுகிறார். சுயேச்சை ஒருவரும் போட்டியிடுகிறார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் 8,590 வாக்குகள் பெரும்பான்மையில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட பெர்சத்து கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெற்றார்.

எனவே,  மீண்டும் பாக்காத்தான் வெற்றி  பெறுவதற்கான வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக லார்க்கின் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தொகுதியில் மூடாவும் பிகேஆரும் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்துக் கொள்வதால் தேசிய முன்னணியே லாபமடையும்– வெற்றியும் பெறும் – என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும்  இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று லார்க்கின். மற்றொன்று ஸ்தூலாங்.

ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியை கடந்த பொதுத் தேர்தலில்  பிகேஆர் 19,782 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி கொண்டது.

இந்தத் தொகுதியின் கீழ் வரும் லார்க்கின் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து கைப்பற்ற – ஸ்தூலாங் தொகுதியை ஜசெக கைப்பற்றியது.

எனவே, ஜோகூர் பாரு நாடாளுமன்றம் அதன் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் என அனைத்தையும் பக்கத்தான் ஹாப்பான் கட்சிகளே 2018-இல் கைப்பற்றின.

இத்தகைய சாதகமான சூழ்நிலை நிலவும் ஒரு தொகுதியில் பிகேஆர், மூடா இரண்டுமே மோதிக் கொள்கின்றன. தேர்தல் முடிவுகளின்படி இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கப் போகிறது என்பதை அரசியல்
பார்வையாளர்கள்  ஆர்வத்துடன் கவனிப்பதால்தான் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக லார்க்கின் மாறியிருக்கிறது.

2018 பொதுத் தேர்தலில்  55,858 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை இந்தத் தேர்தலில் 76,049 ஆக உயர்ந்திருக்கிறது. சுமார் இருபதாயிரத்திற்கும்
மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தொகுதியில் புதிதாக இணைந்துள்ளனர்.

இன விகிதாச்சாரபடி 47,820 மலாய் வாக்காளர்களும் 21,437 சீன வாக்காளர்களும் 4,983 இந்திய வாக்காளர்களும் 1,809 மற்ற வாக்காளர்களும் லார்க்கின் தொகுதியில் இருக்கின்றனர். இந்திய வாக்காளர்களின் விழுக்காடு
6.55 ஆகும்.

மூடா – பிகேஆர் கட்சிகளுக்கிடையில் லார்க்கின் தொகுதியில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன என்பதைக் காணத்தான் அனைவரும் ஆவலுடன்
காத்திருக்கின்றனர்.

அது தெரியவரும்போது  அதன் மூலம் – யாருக்கு எங்கே பலம் – எங்கே ஆதரவு – என்பது போன்ற பல அரசியல் செய்திகளும் நமக்கும் தெரியவரும்.

-இரா.முத்தரசன்