

தமிழக முதல்வருடன் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த சந்திப்பு


கடந்த மார்ச் 30-ஆம் தேதியன்று சென்னையில் மனித வள அமைச்சுக் குழுவினருடன் சரவணன் ஸ்டாலினை அவரின் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.




தமிழகத்திற்கு வெளியில் உலகிலேயே அதிகம் தமிழர்கள் வசிக்கும் நாடான மலேசியாவுக்கு ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வருகை தர வேண்டும் என்று அமைச்சர் சரவணன் கேட்டுக் கொண்டார்.
உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்றும் சரவணன் முதல்வரிடம் உறுதியளித்தார்.
மலேசிய சமூக பாதுகாப்பு ஆணையத்தின் (SOCSO) தலைவர் டான்ஸ்ரீ ஹனிஃபா, மலேசியா பாதுகாப்பு அமைப்பின் செயல்முறை அலுவலர் டத்தோஸ்ரீ அஸ்மான், மலேசிய மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு வாரியத் தலைவர் (HRDF) டத்தோ ஷாகுல் ஹமீத் தமிழக இந்து சமயம் மற்றும் அறவாரியத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்திப்பில் உடன் இருந்தனர்.


தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள், மறுசீரமைப்பு வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுற்றியுள்ள பிற பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாக சரவணன் தெரிவித்தார்.
மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்


சென்னை வருகையின்போது அங்கு நிகழ்ச்சி ஒன்றிலும் சரவணன் கலந்து கொண்டார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே. சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் சரவணன் சிறப்புரையாற்றினார்.


மாவட்ட மகளிர் தொண்டரணிஅமைப்பாளர் ராஜேஸ்வரி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியை முனைவர் பர்வின் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


டத்தோஸ்ரீ சரவணன் உரையாற்றுகையில், “தமிழ்நாட்டின் முதல்வர் நண்பர் மு.க. ஸ்டாலின் எத்தகைய மனிதநேயமிக்க அரிய மனிதர் என்பது அவரது ஒவ்வொரு செயலும் நமக்கு உணர்த்துகிறது. ஆளுமைமிக்க ஒரு தலைவரை நீங்கள் முதல்வராக பெற்றுள்ளீர்கள். அவர் ஒவ்வொரு நிமிடமும் மக்களையே எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு எத்தகு நல்ல விஷயங்களைத் தருவது என்பது குறித்து சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தான் மட்டுமல்லாமல் துறைசார் அதிகாரிகளையும் முடுக்கி பணியாற்ற செய்து வருகிறார்” எனக் குறிப்பிட்டார்.
“அவரோடு அமீரகதில் சில நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்பினை நான் பெற்றேன். தமிழகத்தில் மாத்திரமல்ல, அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியை என்னால் காண முடிந்தது. உண்மையில் மக்கள் முதல்வராகவே அவர் வாழ்கிறார். மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு நான் உள்ளபடியே பெரிதும் மகிழ்கிறேன்” என சரவணன் ஸ்டாலினின் பணிகள் குறித்து புகழாரம் சூட்டினார்.
சென்னை மனிதநேய நிகழ்ச்சிக்கான அருமையான ஏற்பாட்டை செய்த அமைச்சர் நண்பர் சேகர் பாபுவுக்கும் இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சரவணன் தனதுரையில் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர்கள், பிரமுகர்களுடன் சந்திப்புகள்


கவிஞர் வைரமுத்துவுடன் சந்திப்பு
மலேசியாவின் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்ட மலேசியப் பெருந்தமிழர்களுக்கு வரவேற்பளித்தேன் .
அடுத்த 20 ஆண்டுகளில் நிகழப்போகும் உலக மாற்றங்கள், உக்ரைன் போரின் விளைவுகள், இலங்கையின் பொருளாதாரத் துயரம் குறித்து உரையாடினோம்.
விருந்து முடிந்தும் எங்கள் பசி தீரவில்லை!