Home அரசியல் சுல்கிப்ளி பிரச்சினையையும் மீறி மஇகா தேசிய முன்னணியை ஆதரிக்கும்- கே.எஸ்.சுப்பையா

சுல்கிப்ளி பிரச்சினையையும் மீறி மஇகா தேசிய முன்னணியை ஆதரிக்கும்- கே.எஸ்.சுப்பையா

550
0
SHARE
Ad

MIC-Logo-Sliderபெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 24 – எதிர்வரும் 13 வது பொதுத்தேர்தலில் ஷாஆலாம் தொகுதி மஇகாவின் கிளைகள் தேசிய முன்னணி வெற்றிக்காக பாடுபடுவது பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பொருட்டே தவிர சுல்கிப்ளி நோர்டினுக்காக அல்ல என்று ஷாஆலாம் மஇகாவின் தொகுதித் தலைவர் கே.எஸ். சுப்பையா இன்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தியர்கள் இந்த வேட்பாளர் தேர்வு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தாலும் மஇகா பிரதமருக்காக களமிறங்கி வேலை செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மஇகாவும் மற்ற இந்திய கூட்டணிக் கட்சிகளும் பிரதமரின் தலைமைத்துவத்தை ஆதரித்தாலும் சுல்கிப்ளியை  ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பது இந்தியர்களின் கையிலேயே உள்ளதாக அவர் கூறினார்.

சுல்கிப்ளியை வேட்பாளராக ஆக்கக்கூடாது என்பதில் தோற்றோம்

ஆரம்பத்திலிருந்தே தாங்கள் சுல்கிப்ளியை தொகுதி வேட்பாளராக நிறுத்துவதைத் தவிர்க்க முயற்சி செய்ததாகவும் இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும், தேசிய மஇகாவிற்கும் கடிதம் எழுதியதாகவும் இருப்பினும் பிரதமர் சுல்கிப்ளியை வேட்பாளராக நியமித்து விட்டதாகவும், மஇகா தலைமையும் தங்களை பிரதமரின் வேட்பாளருக்காக வேலை செய்யும் படி பணித்துள்ளதாகவும் சுப்பையா தெரிவித்தார்.

மேலும் இந்தியர்களுக்கென ஒரு மண்டபமும், உள்ளூர் கோயில் ஒன்றுக்குமாக 1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் கூறியதாகவும், இதனால் தாங்கள் சுல்கிப்ளியைப் பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றும் தங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் நேரடி தொடர்புள்ளதாகவும் சுப்பையா கூறினார்.

ஷாஆலம் தொகுதி ம.இ.க துணைத்தலைவர் கிளாசிக் சுப்பையா கட்சியிலிருந்து விலகியது பற்றி கருத்து கேட்டபோது, அது தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று தெரிவித்த சுப்பையா இதனால் தேசியமுன்னணியை ஆதரிக்கும் தங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

பிரதமரின் தேர்வு-மீபாஸ் அதிருப்தி

இதற்கிடையே  சுல்கிப்ளியை தற்காக்கும் பிரதமரின் முடிவுக்கு மீபாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

நஜிப் சுல்கிப்ளியை மன்னித்துவிடும்படி இந்திய சமூகத்தினரை கேட்டுக்கொண்டது பற்றிக் கருத்துரைத்த அதன் தலைவர் பாரதிதாசன், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்றும் சமயங்களுக்கிடையே அமைதியின்மை, வெறுப்பு மற்றும் மன வேற்றுமையை ஏற்படுத்தியமைக்காக அவரை காவல்த்விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

2008-ஆம் ஆண்டு கூலிமில் பிகேஆர் வேட்பாளராக வென்ற சுல்கிப்ளி, பின் அக்கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்தமையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், பின் சயேட்சையாக தேசிய முன்னணியின் ஆதரவாளராக செயல்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இப்போது அவர் தேசிய முன்னணியின் நேரடி வேட்பாளராக களமிறங்கி, பாஸ் வேட்பாளரான காலிட் சமாட்டை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

நகர்ப்புற தொகுதியான ஷாஆலாமில் 100,076 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 69.9 விழுக்காடு மலாய் வாக்காளர்கள். சீனவாக்காளர்கள் 14.9 விழுக்காடும், இந்திய வாக்காளர்கள்14.2 விழுக்காடும் உள்ளனர்.