இராமநாதபுரம் : தமிழ்நாட்டின் இராமநாதபுரம் வட்டாரத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய வணிகர்கள் வியாழக்கிழமையன்று (ஜூன் 23) ஏற்பாடு செய்த பிரத்தியேக வரவேற்பு நிகழ்ச்சியில் மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டார்.
“இராமநாதபுர மாவட்டப் பொது மக்கள் மற்றும் இராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசியத் தொழிலதிபர்களின் அன்பு மழையில் இன்று நனைந்தேன்.
இலக்கிய நிகழ்ச்சிகளுக்காகத் தமிழ்நாடு சென்ற எனக்கு வரவேற்பு விருந்துபசரிப்பு என்று கூறி, ஏற்பாட்டிலும் உபசரிப்பிலும் பிரமிக்க வைத்தார்கள். இராமநாதபுர மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் என பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்” என சரவணன் குறிப்பிட்டார்.
முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த சரவணனுக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது. திருச்சி வந்தடைந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரவணன், தனது இலக்கியப் பயணம் மலேசியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
கோவிட்-19 காலகட்டத்தில் பாதிப்பை எதிர்நோக்கிய 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மலேசிய அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கிய காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறைந்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.
கோவிட் காலகட்டத்தில் 5.3 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது 4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்றும் சரவணன் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு 2 துறைகளில் மட்டுமே மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது என்றாலும் மற்ற துறைகளுக்கும் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு இந்தியத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.