சென்னை : இன்று காலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிரந்தரப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராகத் தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி கிருஷ்ணன், அதிமுக பொதுக் குழு நடத்த எந்தவிதத் தடையும் இல்லை என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஒரு கட்சியின் உள் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் அகற்றப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர் கட்சியில் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் அதிமுக பொதுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் 8 தீர்மானங்கள் திமுகவுக்கு எதிரானத் தீர்மானங்களாகும்.
இதற்கிடையில் அதிமுக அலுவலகத்திற்கு வெளியே அதிரடிப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நடந்து வரும் மோதல்களைத் தணிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் சில கோப்புகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.