(கடந்த ஜூலை ரபிசி ரம்லி : கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் முகமட் ரபிசி ரம்பி. இதனால், கட்சியிலும் நம்பிக்கைக் கூட்டணியிலும் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
திரெங்கானு மாநிலத்தின் கெமாமான் வட்டாரத்தைச் சேர்ந்த அந்த மாணவனுக்கு கோலகங்சார் அரச மலேசியக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது.
பேராக், கோலாகங்சார் அரச மலேசியக் கல்லூரியில் பயில்வற்கான வாய்ப்பு என்பது மலாய் மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்புகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் மலாய் சுல்தான்களின் குடும்பத்தின் குழந்தைகள் பயில்வதற்காக பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட பள்ளி இது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு தழுவிய அளவில் சிறந்த மலாய் மாணவர்கள் பிரத்தியேகமாகப் படிக்கும் கல்லூரியாக உருமாற்றம் கண்டது.
கோலகங்சார் அரச மலேசியக் கல்லூரியில் படித்த வேளையில் கல்விப் பாடங்களிலும், புறக் கல்விப் பாடங்களிலும் சிறந்து விளங்கினான் அந்த திரெங்கானு மாணவன். 1994-ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரியிலேயே மிகச் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.
பள்ளி ஆண்டு விழாவில் அந்த மாணவனுக்கு பரிசளிக்கப்படுகிறது. அந்தப் பரிசை அந்த மாணவனுக்கு எடுத்து வழங்கியவர் அப்போது அம்னோவின் துணைத் தலைவராகவும் நிதியமைச்சராகவும் இருந்த அன்வார் இப்ராகிம்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இதே கோலகங்சார் அரசக் கல்லூரியில் படித்தவர்தான் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாணவனாக அன்வாரிடம் 1994-ஆம் ஆண்டில் பரிசு பெற்றவர்தான் முகமட் ரஃபிசி ரம்லி.
காலச் சுழற்சி, ஆண்டுகள் பல கடந்து, ரஃபிசி ரம்லியையும் அன்வார் இப்ராகிமையும் இன்னொரு தளத்தில் இப்போது கொண்டு வந்து இணைத்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் அன்வார் தேசியத் தலைவராகத் தொடர்ந்து நீடிக்க, அந்தக் கட்சியில் அவருக்குத் துணையாக – கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ரஃபிசி ரம்லி. கடந்த வார இறுதியில் நடைபெற்ற பிகேஆர் பேராளர் மாநாட்டில் ரஃபிசியின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிரடி அரசியலின் நாயகன் ரபிசி ரம்லி
1998-ஆம் ஆண்டில் தொடங்கிய ரிபோர்மாசி என்னும் அன்வாரின் மறுமலர்ச்சிப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் ரஃபிசி ரம்லி. பல்கலைக் கழக மாணவப் பருவத்திலேயே தொடங்கிய அவரின் அரசியல் ஆர்வம் பிகேஆர் கட்சியிலிருந்து தொடங்கியது.
இலண்டனில் கணக்கியல் (அக்கவுண்டன்சி) துறையில் நிபுணத்துவம் பெற்ற ரஃபிசி பின்னர் பெட்ரோனாசில் சில காலமும், பார்மாநியாகா என்னும் மருந்துகள் தயாரிப்பு, விநியோக நிறுவனத்தில் சில காலமும் பணியாற்றினார்.
மக்களுக்கானப் போராட்டம்-ஊழலை எதிர்த்துப் போராட்டம் – என்ற அவரின் அணுகுமுறையும் பட்டம், பதவிகளை வாரி வழங்கும் அம்னோ அரசியலில் இணையாமல், எதிர்க்கட்சி அரசியலில் தன்னை அவர் பிணைத்துக் கொண்டதும்- அவருக்கென நாடு தழுவிய ஆதரவாளர்களைப் பெற்றுத் தந்தது.
பல்வேறு ஊழல் விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர், அதன் காரணமாக அம்னோ-தேசிய முன்னனி அரசாங்கம் கொண்டு வந்த குற்றவியல் வழக்குகளையும் எதிர்த்துப் போராடினார். இது மக்களின் மத்தியில் அவரை மேலும் பிரபலமாக்கியது.
2013-இல் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் முதல் முயற்சியிலேயே 26,729 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். பல இன வாக்காளர்கள் கொண்ட அந்தத் தொகுதியில் அவர் பெற்ற வெற்றி அவரின் அரசியல் செல்வாக்குக்கு இன்னொரு உதாரணம்.
2018-இல், தன்மீதான வழக்குகள், மேல்முறையீடுகள் காரணமாக, கட்சி நலன் கருதி அவர் மீண்டும் பாண்டான் தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இதுவும் அவரின் அரசியல் நாகரிகத்தையும் பண்பையும் எடுத்துக் காட்டியது.
அவருக்குப் பதிலாக பாண்டான் தொகுதியில் போட்டியிட்ட அன்வாரின் துணைவியார் வான் அசிசா அபார வெற்றி பெற்று அதன் மூலம் நாட்டின் முதலாவது துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.
எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் வான் அசிசா பாண்டான் தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொகுதியின் தலைவராகவும் ரஃபிசி ரம்லி வெற்றி பெற்றிருக்கிறார்.
எனவே, மீண்டும் அவர் பாண்டான் தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கலாம். அதிரடியாக பாண்டானை அடுத்துள்ள கோம்பாக் தொகுதியில் ரஃபிசி ரம்லி போட்டியிடும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது. “சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கும் வண்ணம்” – பழைய அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்ளும் வண்ணம் – அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட ரஃபிசி ரம்லி முன்வரலாம். அஸ்மின் அலிதான் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்.
நம்பிக்கைக் கீற்றுகளை பிகேஆர் கட்சியில் தோற்றுவித்த ரபிசி ரம்லி
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உடனேயே ரஃபிசி ரம்லியின் அறிக்கைகளும் பேச்சுகளும் கட்சியினரிடத்திலும் – ஊழலற்ற மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களிடத்திலும் – நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்திருக்கின்றன.
“அன்வாருக்கு துதிபாட மாட்டேன். ஆனால் அதே சமயம் அஸ்மின் அலி போல கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் துரோகம் இழைக்க மாட்டேன். அன்வாரின் பிரபலத்தைப் பாதுகாப்பதை விட 15-வது பொதுத் தேர்தலில் வெல்வதுதான் நமது இலக்கு” என எடுத்த எடுப்பிலேயே முழங்கியிருக்கிறார் ரஃபிசி.
இதுநாள் வரையில் அம்னோவின் நஜிப்புக்கு இணையாக துணிச்சலுடனும், அரசியல் சாதுரியத்துடனும், சரியான புள்ளிவிவரங்களுடனும் பதிலடி கொடுக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் பக்காத்தான் கூட்டணியில் இருந்ததில்லை. அன்வார், கட்சியின் தேசியத் தலைவர் – பக்காத்தானின் தலைவர் என்பதால் அதற்கு இணையான பதவி வகிக்காத நஜிப்பின் ஒவ்வொரு அறிக்கைக்கும் பதில் சொல்வதை அன்வார் தவிர்த்து வந்தார்.
இப்போது “சபாஷ் சரியான போட்டி” என்பதுபோல – நஜிப்பின் கூற்றுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் சவால் நிலையை ரஃபிசி முன்னெடுத்திருக்கிறார். நஜிப்பின் பொய்யுரைகளுக்கு பதிலடி கொடுக்கத் தயாராவோம் என்றும் அறைகூவல் விடுத்து கட்சியினரை அழைத்திருக்கிறார்.
கிராமப் புறங்களில் உள்ள மலாய் வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் – அப்படிச் செய்தால்தான் அடுத்த பொதுத் தேர்தலில் நம்மால் வெல்ல முடியும் என்ற கோரிக்கையும் நடந்து முடிந்த பிகேஆர் தேசியப் பேராளர் மாநாட்டில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதனைச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவராக – ஈர்ப்பு சக்தி படைத்தவராக – ரஃபிசி ரம்லி காணப்படுகிறார்.
24 ஆண்டுகளுக்கு முன்னர் பிகேஆர் தொடங்கப்பட்டபோது, இது அன்வாரின் குடும்பக் கட்சி எனவும், இதுபோன்ற பலஇனக் கட்சி மலேசியாவில் நீடிக்காது எனவும் அந்தக் கட்சி சிறுமைப்படுத்தப்பட்டது.
ஆனால், காலம் மாறியது. 2018-இல் பிகேஆரின் ஒரே சின்னத்தின்கீழ் அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் – தேசிய முன்னணியும் வீழ்த்தப்பட்டது – என்ற சாதனையை நாம் மறந்து விட முடியாது.
ஏனோ, அதற்குப் பின்னர் துன் மகாதீரின் விடாப்பிடியாலும், அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் பிகேஆர்-கட்சியும், அன்வாரும் செல்வாக்கை இழந்து விட்டார்கள் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாடும், கட்சியின் துணைத் தலைவராக ரஃபிசி ரம்லியின் தேர்வும் அந்தக் கட்சியின் செல்வாக்கை சற்றே உயர்த்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தொய்வு கண்டிருந்த அந்தக் கட்சியின் இரத்த நாளங்களில் ரஃபிசி ரம்லியின் வரவு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியிருக்கிறது.
குறிப்பாக, 18-வயது வாக்காளர்களின் எண்ணக் கனவுகளை எதிர்காலத்தில் நிறைவேற்றக் கூடிய நாயகனாக ரஃபிசி ரம்லி நம்பிக்கைக் கீற்றுகளை பாய்ச்சியிருக்கிறார்.
அவரால் – பிகேஆர் கட்சிக்கும் – பக்காத்தான் கூட்டணிக்கும் கண்டிப்பாக கூடுதல் வாக்குகள் விழும் – என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.
-இரா.முத்தரசன்
–