இஸ்லாமாபாத், ஏப்ரல் 24- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ 2007ம் ஆண்டில், பிரசாரத்தில் ஈடுபட்டபோது படுகொலை செய்யப்பட்டார்.
புட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது, அவசர நிலையை பிரகடனம் செய்து 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 69) மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அவர் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது சொந்த பங்களாவிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முஷாரப் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இங்குதான் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முதன்முறையாக, இந்த நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜரானார். அவரிடம் நீதிபதி சௌத்ரி ஹபீப்,உர்,ரஹ்மான் விசாரித்தார். முஷாரப்பை தப்பியோடக்கூடியவர் என்று அறிவித்துள்ளதையும், அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையும் நீக்குமாறு அவரது வக்கீல் வாதாடினார்.
இதை ஏற்காத நீதிமன்றம், பெனாசிர் படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு முஷாரப்புக்கு அறிவுரை கூறியது. வழக்கு மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கார் குண்டு:-
முஷாரப் சிறை வைக்கப்பட்டுள்ள பண்ணை வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் ஒரு கார் கேட்பாரற்று நின்றிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் இதை சோதனை செய்தனர்.
அதில் 50 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, இதை வெடிகுண்டு நிபுணர்கள் அகற்றி செயலிழக்கச் செய்தனர்.