Home Photo News தம்புன்: மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா?

தம்புன்: மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா?

442
0
SHARE
Ad

(2-வது தடவையாக மாநிலம் விட்டு தொகுதி மாறி நிற்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். 15-வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடாமல், பேராக்கில் உள்ள தம்புன் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பார்த்து, பத்திரிகையாளர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினர். ‘நீங்கள் வெளியூரில் இருந்து இங்கு களமிறங்குகிறீர்கள் எனக் கூறப்படுகின்றதே அது குறித்து உங்கள் கருத்தென்ன?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

‘நான் ஒரு மலேசியன். எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். பேராக்கில் நான் 9 ஆண்டுகளைக் கழித்துள்ளேன். எனவே நான் இந்த மாநிலத்திற்குப் புதியவன் அல்லன்’ எனப் பதிலளித்தார் அன்வார்.

பேராக்கில் அந்த 9 ஆண்டுகளில் அன்வார் எங்கே – எப்போது வசித்தார் எனப் பலர் யோசித்திருக்கலாம்.

#TamilSchoolmychoice

கோலகங்சாரிலுள்ள அரசக் கல்லூரியில் தங்கியிருந்து படித்து 7 ஆண்டுகள் இடைநிலைக்கல்வியை முடித்தவர் அன்வார்.

அதன்பிறகு மலாயாப் பல்கலைக்கழகம் சென்றார். பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சமூகப் போராட்டங்களில் ஈடுபட்ட அவர், 1974ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார். அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்த இடம் தைப்பிங், கமுண்டிங் சிறைச்சாலையாகும்.

கெடா, பாலிங் வட்டாரத்தில் சில விவசாயிகள் வறுமை காரணமாகப் பசியால் இறந்தனர் என்ற செய்திகள் பரவ, அதன் காரணமாக மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களும் மற்ற பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்தார்.

அதற்காகவே அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கமுண்டிங் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்படி பார்த்தால் இடைநிலைக் கல்விக்காக 7 ஆண்டுகள், கமுண்டிங் சிறைவாசம் இரண்டு ஆண்டுகள் என 9 ஆண்டுகளை அவர் பேராக்கில் கழித்திருக்கிறார்.

ஆனால் அவர் போட்டியிடும் தம்புன் தொகுதியை வெற்றிக்கொள்ள அந்தத் தகுதி மட்டும் போதுமா?

2ஆவது முறையாக மாநிலம் மாறும் அன்வார்

வேட்புமனுத் தாக்கலின்போது அன்வார் – அகமட் பைசால் அசுமு

2018 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரச மன்னிப்பைப் பெற்றார் அன்வார். தொடர்ந்து போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் பிகேஆர் உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா பதவி விலக, அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்வார்.

பாரம்பரியமாக பினாங்கிலுள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் 1982 முதல் அன்வார் போட்டியிட்டு வந்திருக்கிறார். அவர் சிறையில் இருந்த காலங்களில் அவரின் மனைவி வான் அசிசாவும் பின்னர் மகள் நூருல் இசாவும் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றனர்.

முதன்முறையாகத் தொகுதி மாறி – மாநிலம் விட்டு போர்ட்டிக்சனில் – போட்டியிட்ட அன்வார், இப்போது இன்னொரு மாநிலத்திற்கு மாறியிருக்கின்றார்.

அமாட் ஃபைசால் அசுமுவை வீழ்த்துவாரா அன்வார்?

ஷெரட்டன் நகர்வு மூலம் பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்த அரசியல் தவளைகள் – துரோகிகளின் – தொகுதி ஒன்றில் போட்டியிடுவேன் என அன்வார் பொதுத்தேர்தலுக்கு முன்னர் அறைகூவல் விடுத்திருந்தார். அவரின் கண்ணோட்டத்தின்படி தம்புன் தொகுதி நடப்பு உறுப்பினர் அமாட் ஃபைசால் அசுமுவும் ஓர் அரசியல் தவளைதான்.

அகமட் பைசால் அசுமுவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அஸ்மின் அலி

2018 பொதுத்தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அமாட் ஃபைசால் அசுமு தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் செண்டரியாங் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றியதால் மாநில மந்திரி பெசாரானார்.

2020இல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் பேராக் மாநில அரசாங்கமும் கவிழ்ந்தது. புதிய மந்திரி பெசாராக அம்னோவின் சாரனி முகமட் நியமிக்கப்பட்டார். அசுமு முதலில் பிரதமரின் சிறப்புச் செயலாளராகவும் பின்னர் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் முஹிடின் யாசினால் நியமிக்கப்பட்டார்.

பெர்சத்து கட்சியின் துணைத்தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். பேராக் மாநிலத்தை முதன்மை மாநிலமாக இந்தப் பொதுத்தேர்தலில் முன்வைத்து மீண்டும் கைப்பற்ற பக்காத்தான் கூட்டணியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் அந்த மாநிலத்தைக் கைப்பற்ற பக்காத்தான் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

அன்வாரின் தம்புன் வரவு அவர்களின் பிரச்சாரத்திற்குக் கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.

அன்வாரை வீழ்த்த தேசிய முன்னணி வியூகம்

தம்புன் தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி சார்பில் தம்புன் அம்னோ தலைவர் அமினுடின் ஹானாஃபியா இங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். பக்காத்தான் கூட்டணி பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராஹிம் என்பதால் அவரை வீழ்த்தினால் அது அம்னோவுக்குப் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதால் தேசிய முன்னணியும் இங்கு தீவிரத் தேர்தல் பணி ஆற்றிவருகிறது.

துன் மகாதீரின் பெஜூவாங் கட்சி சார்பில் அப்துல் ரஹிம் தாஹிர் போட்டியிடுகிறார். பெர்சாத்து கட்சியின் அசுமு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

மஇகாவைச் சேர்ந்த 8 கிளைகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தியால் அன்வாரின் ஆதரவு இந்தியர்களிடையே பெருகிவருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது.  ஆனால் அந்தச் செய்தி உண்மையல்ல. ஒரு சிறு குழுவினர் மட்டுமே மஇகாவில் இருந்து விலகி பிகேஆரில் இணைந்ததாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன. எந்தத் தரப்பு கூறுவது உண்மை என்பது தெரியவில்லை.

அன்வாரின் செல்வாக்கு, பிரச்சார ஆற்றல், ஈர்க்கும் சக்தி இவற்றையெல்லாம் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. 2018 புள்ளி விவரங்களின்படி 67 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தம்புன் தொகுதியில் 20 விழுக்காடு சீனர்களும் 11 விழுக்காடு இந்தியர்களும் வாக்காளர்களாக இருக்கின்றனர். மற்ற இன வாக்காளர்கள் இரண்டு விழுக்காட்டினர்.

இந்த பொதுத் தேர்தலில் 160,558 வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது தம்பூன். அனைவரின் பார்வையும் இப்போது தம்பூன் மீதுதான்!

மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் – அந்த வாக்குகள் பிளவுபடுவதால் எந்த வேட்பாளருக்கு ஆபத்து அன்வாருக்கா? அசுமுவுக்கா?

– இரா.முத்தரசன்