மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும்
“உளமுற்ற தீ” புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 டிசம்பர் 2022-ஆம் நாள் காலை 9.30 மணி தொடங்கி மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவல் துறையின் முன்னாள் உயர் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் இலக்கிய உரை நிகழ்த்தினார். இளையோர் மூத்தோர் பங்கு கொள்ளும் கவியரங்கமும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது.
மூத்த கவிஞர் ஒருவர்க்கும், இளையோர் ஒருவர்க்கும் விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசியக் கவிஞர்களின் இந்த புதுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ப.இராமு அறக்கட்டளை தோற்றுநரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கவிதைக்கு அங்கீகாரம் வழங்கும் வண்ணம் நடைபெற்ற இந்த இலக்கிய விழாவில், மலேசிய இலக்கியவாதிகளும், இலக்கிய ஆர்வலர்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இளையோர் கவியரங்கம் இளையோர் மனம்/ உணர்வு என்ற தலைப்பில் கீழ்க்காணும் குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது:
தலைவர்: கவிஞர் சிவகுமார்
1.கவிஞர் முகிலன்
2.கவிஞர் லீனா
3.கவிஞர் பிரித்வி
மூத்தோர் கவியரங்கம் ‘மானுடம்’ என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குழுவினர் பங்கேற்க நடைபெற்றது:
தலைமை : கவிஞர் பச்சைபாலன்
1. கவிஞர் கருணாகரன்
2.கவிஞர் கனகராஜன்
3. கவிஞர் தமிழ்செல்வம்
இந்த நூல் தொகுப்புக்காக 129 கவிஞர்களிடமிருந்து 330 கவிதைகள் நாடுதழுவிய அளவில் கவிஞர்களிடமிருந்து பெறப்பட்டது. தேர்வுக் குழுவினரால் 61 கவிஞர்களின் 106 கவிதைகள் தொகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மறைந்த மந்திரக் கவிஞன் ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன் என்று டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கடந்த வருடம் அறிவித்தார். ப.இராமுவின் மறைவிற்குப் பின்னர் ஏப்ரல் 2021-இல் வெளியான அவரது “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” நூல் வெளியீட்டில் சரவணன் இந்த அறிவிப்பைச் செய்தார்.
ப.இராமுவின் இலக்கியப் பணிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், கவிஞர் ப.இராமுவின் பெயரில் ‘அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. சரவணனின் நேரடிப் பார்வையில், இலக்கியப் படைப்புகளை உருவாக்கி ப.இராமுவின் பெயரில் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சரவணன் அறிவித்தார். ஆண்டுக்கு இரு கவிதை நூல்களின் தொகுப்பு முறையே, மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள் என வெளியிடப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
ப.ராமு அறக்கட்டளையின் முதல் முயற்சியாக மரபுக்கவிதைத் தொகுப்பு நூல், 62 கவிஞர்களின் 122 கவிதைகளைத் தாங்கி கடந்த ஜுன் மாதம் வெளியீடு கண்டது.
தங்களது படைப்பு பதிப்பாக வெளிவர வேண்டும் எனும் கவிஞர்களின் கனவு, நினைவாகும் தருணம் இது. அமரர் கவிஞர் ப.இராமு ஆசிகளோடு “உளமுற்ற தீ – இலக்கிய வானில் மலேசிய புதுக் கவிதைகள்” வெளியீடு கண்டிருக்கிறது.
புதுக்கவிதை நூல் வெளியீடாக மட்டும் இல்லாமல், பல்வேறு இலக்கிய அங்கங்கள் “உளமுற்ற தீ சேர்த்து பரிமாறப்பட்டது. புதுக்கவிதைப் படைப்பாளர்களின் படைப்புகள் காலத்தால் கரைந்து போகாமல் இருக்கவும், கவிதைத் துறைக்குப் பங்காற்றியவர்கள் மறக்கப்படாமல் இருக்கவும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தமிழோடு உயர்வோம்.