“புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து

  167
  0
  SHARE
  Ad

  மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

  புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்

  2023ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மையை வழங்கும் இனிமை மிக்க ஆண்டாக மலர வேண்டும்.

  உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டு நலம் தரும் ஆண்டாக, வளம் பெருகும் ஆண்டாக, இயற்கையின் ஆசியோடு மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  #TamilSchoolmychoice

  2023 அனைவருக்குமே ஒரு புதிய விடியலைத் தரும் என எதிர்பார்ப்போம். தொடர்ச்சியாக பெருந்தொற்றுப் பாதிப்பு, இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார தேக்கம் என கடந்த சில வருடங்களாகவே மக்களை வருத்திய உபாதைகள் அனைத்தும் இனி ஒரு போதும் வராமல் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த மலேசியர்களும் சுகாதாரப், பொருளாதார ரீதியாக மேன்மையடைந்து வெற்றிநடை போட வேண்டும்.

  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை இந்த வாழ்க்கை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அரசியல் ரீதியாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை 2022-இல் நாம் கண்டோம். மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். 2023-இல் நாடும், வீடும் நலம் பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.

  “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதற்கு ஏற்ப நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது. நாம் உழைக்காமல் முன்னேற முடியாது. அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைக்க முற்பட வேண்டும். முடிவென்பது எதுவும் இல்லை. ஒரு முடிவில் இன்னொரு தொடக்கம் என்பதை நினைவில் கொள்வோம்.

  அதே வேளையில் நாம் வாழ்வதற்காக இயற்கையையும், மிருகங்களையும் அழித்து வாழும் எண்ணம் வேண்டாம். இயற்கைக்குப் புறம்பாக செய்யும் ஒவ்வொரு செயலும் நாளை நம்மையும், நம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இன்று தண்ணீர் பற்றாக்குறை, நாளை காற்று பற்றாக்குறை என அத்தியாவசியத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிவரும்.

  எனவே வாழும் இந்த வாழ்க்கையைப் பிற உயிர்களுக்கும் பயனுள்ளதாக்கி வாழ்வோம். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என வள்ளலார் கூறியது போல் நாமும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம்.

  இந்த எதிர்பார்ப்புகளோடு அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  இங்கு எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
  இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

  அன்புடன்,

  டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
  ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்
  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்