கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வரவேற்பு விழாவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.வரவேற்பு விழா டேவான் துங்கு சான்சலர் மண்டபத்தில் பல்வேறு பிரமுகர்களின் உரைகளுடன் நடைபெற, இன்னொரு புறத்தில் ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வாளர்களால் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டன.
இன்று காலை நடைபெற்ற வரவேற்பு விழாவில் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொழில் முனைவோர் கூட்டுறவுத் துறை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியும் பேராளர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழ் நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதிகாரபூர்வத் தொடக்கவிழா, சனிக்கிழமை (22 ஜூலை 2023) பிற்பகலில் நடைபெறவிருக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதிகாரபூர்வமாக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.