ஜார்ஜ் டவுன்: பினாங்கிலுள்ள பாயா தெருபோங் சட்டமன்றத்தில் உள்ள எஸ்.கே.ஸ்ரீ ரெலாவ் (SK Seri Relau) வாக்குச் சாவடியில், சீல் வைக்கப்படாத வாக்குப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஓர் இடைவெளிக்குப் பின்னர், வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
மதியம் 1.26 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியதாக பக்காத்தான் ஹராப்பானின் பாயா தெருபோங் வேட்பாளர் வோங் ஹோன் வை தெரிவித்தார்.
முன்னதாக, பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் ஓய் நெய் ஊன் எஸ்.கே. செரி ரெலாவில் சீல் இல்லாத வாக்குப்பெட்டியைக் கண்டுபிடித்தபோது மொத்தம் 177 வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே பெட்டியில் போடப்பட்டிருந்தன.
அந்த பெட்டியில் உள்ள எந்த வாக்குகளையும் செல்லுபடியாகும் வாக்குகளாக அங்கீகரிக்க மாட்டேன் என்று ஓய் அறிவித்ததாகவும், 719 வாக்காளர்களைக் கொண்ட அந்த வாக்களிப்பு மையத்தில் வாக்களிப்பை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே செலுத்தப்பட்ட அந்த 177 வாக்குச் சீட்டுகள் செல்லத்தக்கதா இல்லையா என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.