சிங்கப்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடைபெற்ற சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தர்மன் சண்முகரத்தினம் அபார வெற்றி பெற்றார்.
செலுத்தப்பட்ட வாக்குகளில் 70.4 விழுக்காட்டைப் பெற்று அவர் வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய வேட்பாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் வாக்குகள் கிடைத்தன:
அவர் வெற்றி பெற்றவுடன் சிங்கப்பூர் மக்களுக்கு வழங்கிய முதல் செய்தியில் தனது அதிபர் பதவியைக் கொண்டு சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கை கொண்ட எதிர்காலத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கப் பாடுபடப் போவதாக அறிவித்தார்.
66 வயதான தர்மன் சிங்கப்பூரின் 9-வது அதிபராவார்.
முன்னாள் துணைப் பிரதமரான தர்மன், நடப்பு பிரதமர் லீ சியன் லுங்கிற்குப் பிறகு அடுத்த பிரதமராகலாம் என்றுகூட ஒரு காலகட்டத்தில் ஆரூடங்கள் நிலவின. ஆனால், அந்தப் பதவியை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார் தர்மன் சண்முகரத்தினம்.
தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் பதவியை வகிக்கும் மூன்றாவது இந்தியராக அவர் திகழ்வார். அவர் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் சிங்கப்பூரின் அதிபர்களாக 2 இந்தியர்கள் பதவி வகித்திருக்கின்றனர்.
சிங்கை வரலாற்றில் தேவன் நாயர்தான் முதல் இந்திய அதிபர். ஐம்பத்தெட்டு வயதான சி.வி.தேவன் நாயர் 23 அக்டோபர் 1981 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராக நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, எஸ்.ஆர்.நாதன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 75 வயதான அமெரிக்காவுக்கான அந்த முன்னாள் தூதர் 1 செப்டம்பர் 1999-ம் நாள் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக பதவியேற்றார்.
17 ஆகஸ்ட் 2005 அன்று, நாதன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரண்டாவது தவணைக்கும் ஆறு ஆண்டு காலத்திற்கு அதிபராகத் தொடர்ந்தார். சிங்கப்பூரின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராக பணியாற்றியவரும் நாதன்தான்!