Home நாடு மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

405
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : “நாட்டில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு – அவர்கள் கோரிய துறைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் துறையில் 4.0 புள்ளி என அதிகபட்ச தேர்ச்சி பெற்று மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக மற்ற துறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நியாயம் இல்லை” என மஇகா கல்விக் குழு தலைவரும் செனட்டருமான  டத்தோ நெல்சன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்த விவரங்களை நெல்சன் வெளியிட்டார். இதுவரையில் சுமார் 30 மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்த துறையில் தங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என தங்களிடம் முறையிட்டு இருப்பதாகவும் நெல்சன் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவருமே 4.0 என்ற அதிகபட்ச தேர்ச்சியை பெற்றவர்களாக இருந்தும் இவர்களுக்கெல்லாம் உரிய இடம் வழங்கப்படவில்லை என்றால் இவர்கள் சிறந்த முறையில் படித்து தேர்ச்சி பெறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனவும் நெல்சன் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“மருத்துவம் பயில்வது என்பது பல மாணவர்களுக்கு சிறு வயது கனவு. அவர்கள் அதற்காக கடுமையாக உழைத்து சிறந்த தேர்ச்சியை பெறுகிறார்கள். அப்போதுதான் மருத்துவம் பயில இடம் கிடைக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்காக அவர்களின் பெற்றோர்களும் கடுமையாக பாடுபடுகிறார்கள். பல தியாகங்கள் செய்கிறார்கள். எனினும் அதிகபட்ச தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்கவில்லை என அந்த மாணவர்களிடம் கூறுவது வருத்தத்தையும் மிகுந்த ஏமாற்றத்தையும் அளிக்கிறது. எனவே கல்வி அமைச்சு பொது பல்கலைக் கழகங்களில் இடம் கிடைத்தவர்களுக்கான இறுதிப் பட்டியலை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என மஇகா கல்விக் குழு சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் அந்தக் குழுவின் தலைவரான நெல்சன் கூறினார்.

இடம் கிடைக்காத இந்த மாணவர்களுக்கு மாற்றுத் தேர்வுகள் என்ன என்பது குறித்து மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் கலந்து ஆலோசித்து இருப்பதாகவும் நெல்சன் தெரிவித்தார்.

“மஇகாவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலும் ஏற்கனவே இதுபோன்று பொதுப் பல்கலகைக் கழகங்களில் இடம் கிடைக்காத பல மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, இதற்கு மேலும் அங்கு இடங்கள் இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. எனவே கல்வி அமைச்சு போதிய இடங்கள் இல்லை என்ற பழைய பாட்டை பாடிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ மருத்துவ துறைக்கான கூடுதல் இடங்களை மாணவர்களின் கல்விக்காக உருவாக்க வேண்டும். இந்த நிலைமையை நான் பகிரங்கப்படுத்தி மக்களின் பார்வைக்காக கொண்டு வருவது இந்திய சமூகத்தின் நலனுக்காக மட்டுமல்ல! மாறாக மற்ற இனங்களிலும் – ஏன் சீனர், மலாய்க்காரர், சமூகங்களிலும், சபா, சரவாக் மாநில மாணவர்களிடத்திலும் கூட இந்த நிலைமை இருக்கலாம் அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த அறைகூவலை நான் கல்வி அமைச்சுக்கு விடுக்கிறேன். சிறந்த தேர்ச்சி பெற்று மருத்துவம் அல்லது தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத் துறைகளில் படிக்க மிகுந்த ஆவலாக இருக்கும் மாணவர்களை ஏமாற்றி விடாதீர்கள் என நான் கல்வி அமைச்சை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த மாணவர்கள்தான் நமது எதிர்கால சொத்து. இவர்கள்தான் சிறந்த எதிர்கால மலேசியாவை உருவாக்க நமக்கு இருக்கும் வாய்ப்பு. அவர்களைக் கைவிட்டு விடாமல் அவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராகிமின் மதானி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்” எனவும் நெல்சன் வலியுறுத்தினார்.