Home Photo News வாரணாசி, எழுத்துருவியல் மாநாட்டில், முத்து நெடுமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாரணாசி, எழுத்துருவியல் மாநாட்டில், முத்து நெடுமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

961
0
SHARE
Ad

வாரணாசி : மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT Bombay) உயர்கல்விக் கழகத்தின் ஐ.டி.சி. கல்லூரி (IDC School of Design), பல கலைத்துறை  அமைப்புகளோடும் மற்ற கல்விக்கழகங்களோடும் இணைந்து ‘டைப்போகிராபி டே’ (Typography Day) எனும் மாநாட்டை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் முழுக்க முழுக்க வனப்பெழுத்து, எழுத்துருவாக்கம் தொடர்பான காட்சிக் கலைகள் (visual arts) குறித்து இந்தியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் முதலியோர் கட்டுரைகளைப் படைப்பர்.

இவ்வாண்டு, இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான காசி என்றழைக்கப்படும் வாரணாசியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் காட்சி கலைத் துறையின் ஏற்பாட்டில் 16-வது முறையாக கடந்த அக்டோபர் 26,27,28 என 3 நாட்களுக்கு ‘டைப்போகிராபி டே’ மாநாடு நடத்தப்பட்டது.

தமிழ்க் கணிமை உலகின் முன்னோடியும் பல்வேறு மொழிகளில் எழுத்துருவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான கணிஞர் முத்து நெடுமாறன் வாரணாசி எழுத்துருவாக்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

எழுத்துருவாக்கப் பட்டறை பங்கேற்பாளர்களுடன் முத்து நெடுமாறன்

ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தது மட்டுமல்லாமல், பல்வேறு பல்கலைக்கழகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுக்கான ஒரு எழுத்துருவாக்கப் பட்டறையையும் நடத்தினார். மாநாட்டின் மூன்றாம் நாள் நடந்த முகாமை உரைக்கும் தலைமை தாங்கினார்.

இந்த ஆண்டு மாநாட்டுக்கான கருப்பொருள் காசி மாநகரின் புகழுக்கேற்ப “புனிதமும் எழுத்துருவாக்கமும்” (The Sacred and Typography) என்று அமைந்திருந்தது.

வாழ்நாள் சாதனையாளர் விருது

மாநாட்டின் இறுதியில் அனைத்துலக அளவில் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் முத்து நெடுமாறன் கடந்த 40 ஆண்டுகளாக ஆற்றி வரும் எழுத்துருவாக்கக் கலைப்பணிகளையும்  நுட்பவியல் பணிகளையும் நினைவு கூர்ந்து பாராட்டி  அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மாநாட்டுக் குழுவினர் வழங்கிச் சிறப்பித்தனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில், அவர் ஒரு முன்னோடியாக இருந்து முன்னெடுத்த முயற்சிகள் குறித்தும், அவற்றின் வெற்றிகள் குறித்தும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார், மாநாட்டின் தோற்றுநர்களின் ஒருவரன பேராசிரியர் அஜந்தா சென். அந்த விளக்க உரையில் குறிப்பிடப்பட்ட முக்கியக் கூறுகள் பின்வருமாறு:

*விண்டோசு கணினி வெளிவருவதற்கு முன்பே, ஒரேநிரக் கணினித் திரையிலும், டாட்-மெட்டிரிக், லேசர் அச்சுக் கருவிகளிலும் பலவடிவங்களில் தமிழ் எழுத்து வடிவங்களை உருவாக்கியது. அவற்றோடு தமிழில் தட்டெழுதி உள்ளிடுவதற்கான மென்பொருளை உருவாக்கி அந்தத் தொகுப்பை முரசு அஞ்சல் எனும் பெயரில் வெளியிட்டு அதன் வழி மலேசிய, சிங்கப்பூர் தமிழ் அச்சுத் துறையையே மாற்றி அமைத்து அதன் மேம்பாட்டுக்கு வித்திட்டது.

*விண்டோஸ் இயங்குதளத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட ‘வாணி’ என்னும் தெலுங்கு மொழிக்கான எழுத்துருக்களை உருவாக்கியது.

*மலேசிய, சிங்கப்பூர் அரசாங்கங்களின் கல்வி அமைச்சுகள், எல்லாக் கல்விப் பணிகளுக்கும் ஒரே சீரான தமிழ் எழுத்துருக்களையும் உள்ளிடு முறைகளையும் பயன்படுத்த வகைசெய்தது.

*ஆப்பிள் நிறுவன கருவிகளுக்காக 13 இந்திய மற்றும் இந்தோசீன மொழிகளில் எழுத்துருக்களை உருவாக்கியது. அவை அனைத்தும் ஆப்பிள் கருவிகளில் இன்றுவரை பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதையும் பேராசிரியர் அஜந்தா சென் எடுத்துக் காட்டினார்.

*ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினிகளிலும், ஐபோன், ஐபேட் கருவிகளிலும் தமிழ் மொழி உள்ளீட்டு முறைகளை அமைத்தது.

*இயங்குதளங்களில் சேர்க்கப்பட்டதைத் தவிர, கையடக்கக் கருவிகளில் தமிழ் மொழியை உள்ளிடுவதற்காக அவர் ‘செல்லினம்’ செயலியையும், மற்ற மொழிகளுக்காக ‘சங்கம்’, ‘மோபைல் ஜாவி’ எனும் குறுஞ்செயலிகளையும் உருவாக்கிப் பொதுப் பயன்பாட்டிற்காக இலவசமாக வெளியிட்டது.  இச்செயலிகள் இன்றுவரை இரண்டரை மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளதையும் பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.

*அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தியாவின் முந்தாரி மொழிக்கென எழுத்துருக்களை வடிவமைத்தது. கூகுள் நிருவனம் வெளியிட்ட இந்த உருவாக்கத்தின் வழி முந்தாரி இனமக்கள் தங்களின் மொழியை இணையத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது என்று பேராசிரியர் கூறினார்.

*மைக்ரோசோப்ட் நிறுவனம் ஆகக் கடைசியாக அறிமுகப்படுத்திய விண்டோஸ் 11 இயங்குதளத்தில் முத்து நெடுமாறன் உருவாக்கிய அஞ்சல் தமிழ் விசைப்பலகை இணைக்கப்பட்டுள்ளது.

*முத்து நெடுமாறன் தொடர்ந்து இந்திய இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துருவாக்கப் பணிகளை எளிமைப்படுத்த தமது ஆற்றலை செலவிட்டு வருவது. அதனை தெளிவாக எடுத்துக்காட்டும் ஓர் உருவாக்கம் அவரின் ‘ஐபிசுகஸ்’ (Hibizcus) எனப்படும் செயலித் தொகுப்பு. இருபது ஆண்டுகளுக்குமேல் தான் உருவாக்கிய சிற்சிறு செயலிகளை ஒரு திரட்டாகச் சேர்த்து எல்லா எழுத்துருவியல் வல்லுனர்களும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் அதனை இலவசமாகவும், திரவூட்டு மென்பொருளாகவும் (open source) வெளியிட்டது.

*மேற்குறிப்பிட்டக் காரணங்களுக்காகவும் இதுபோன்ற முத்து நெடுமாறனின் மற்ற முன்னெடுப்புகளுக்காகவும் இந்த மாநாட்டில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.