தன்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தீபாவளி மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்த இராமசாமி, தனக்கு எதிரான வழக்கில் இழப்பீட்டுத் தொகையை மக்கள் ஒன்று திரட்டிக் கொடுத்தது மறக்க முடியாத சம்பவமாக தன் வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டது எனக் கூறினார்.
வெறும் நிதி திரட்டும் ஒரு நிகழ்வாக அல்லாமல், இந்தியர்களின் உரிமைக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுத்த தனக்கு ஆதரவாக மலேசிய இந்தியர்கள் ஒன்று திரண்டது மறக்க முடியாத வரலாற்று சம்பவம் என்றும் இராமசாமி குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 1,520,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து இராமசாமிக்கு ஆதரவாக அந்த நிதியைத் திரட்டும் முயற்சியை தமிழர் குரல் இயக்கம் தொடங்கியது. தினமும் திரட்டப்பட்ட தொகை இராமசாமியின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை (நவம்பர் 10) காலையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான இலக்கை விட 3 ஆயிரம் ரிங்கிட் கூடுதலாக சேர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
வழக்கின் மேல்முறையீடு தொடரவிருக்கும் நிலையில் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் அந்தப் பணம் வழக்கறிஞர்களின் வசம் இருந்து வரும். இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக அந்தப் பணத்தை எந்தத் தரப்புக்கோ – சாகிர் நாயக் அறிவித்தபடி பாலஸ்தீன மக்களின் நலன்களுக்காகவோ வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இராமசாமிக்கு ஆதரவாக ஒன்று திரண்டு ஒற்றுமையாக இருந்து இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டிக் கொடுத்த மக்களுக்கு இராமசாமி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.