Home Photo News இராமசாமியின் ‘உரிமை’ கட்சி – நேரம் நல்ல நேரம் – மக்கள் ஆதரவு கிடைக்குமா?

இராமசாமியின் ‘உரிமை’ கட்சி – நேரம் நல்ல நேரம் – மக்கள் ஆதரவு கிடைக்குமா?

337
0
SHARE
Ad

(ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 26-ஆம் தேதி தோற்றம் காணவிருக்கிறது இராமசாமி தலைமையிலான புதிய அரசியல் கட்சியான ‘உரிமை’ கட்சி. அத்தகைய ஒரு கட்சி தொடங்கப்படுவதற்கு இது பொருத்தமான நேரமா? மக்கள் ஆதரவு கிடைக்குமா? தனது பார்வையில் விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

பேராசிரியர் பி.இராமசாமியின் ‘உரிமை’ கட்சியின் தோற்றம்தான் சமூக ஊடகங்களில் இப்போது இந்தியர்களின் முதன்மையான விவாதக் களம்.

அரசியல் கட்சி தோற்றுவித்து தோல்வி கண்டவர்களின் வரலாற்றுப் பட்டியல் மிக நீளமானது. ஆனால் வெற்றி கண்டவர்களும் உண்டு. அவர்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்ந்தால், புலப்படும் ஒரு முக்கிய அம்சம் பொருத்தமான அரசியல் சூழல் – நேரம்!

நேரம் என்றால் சோதிட ரீதியான நேரமல்ல! அன்றைக்கிருக்கும் அரசியல் நிலவரங்கள்தான், ஒரு கட்சியின் – அதைத் தொடங்கும் ஒரு தலைவனின் – எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

#TamilSchoolmychoice

நமக்கு நன்கு பரிச்சயமான அத்தகைய சில கடந்த கால அரசியல் சூழல்களைப் பார்ப்போம். இங்கே குறிப்பிடப்படும் களங்கள் வேறாக இருக்கலாம். எனினும் அதற்குள் பொதிந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் பொதுவானதுதான்.

எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய நேரம்…

1972-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரம். இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து, 1967 தேர்தலை விட அதிகமான சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தது. தன்னை யாராலும் அசைக்க முடியாது என்ற இறுமாப்பு கொண்டார் கலைஞர். எம்ஜிஆரை திமுகவில் இருந்து விலக்கினார். அண்ணா திமுக என்ற புதிய கட்சி உருவானது. எம்ஜிஆரின் சினிமா புகழ் உச்சத்திலிருந்த நேரத்தில் – கருணாநிதி-திமுகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் உருவாகியிருந்த எதிர்ப்பு அரசியல் களம், சரியான தலைமைத்துவத்தைத் தேடிக் கொண்டிருந்த ஒரு பொருத்தமான தருணத்தில் – எம்ஜிஆர் கட்சியைத் தோற்றுவித்ததால் அவரால் மக்கள் செல்வாக்குடன் ஒரு தலைவராக  உருவாக முடிந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் திமுகவைத் தோற்கடித்து முதலமைச்சரானார். அவர் தொடங்கிய அதிமுக இன்றும் 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்.டி.இராமராவ் இன்னொரு உதாரணம்…

என்.டி.இராமராவ்

ஆந்திரா மாநிலத்தில் எம்ஜிஆருக்கு நிகரான பிரபல நடிகர் என்.டி.இராமராவ். எந்தவித அரசியல் ஈடுபாடும் இல்லாமல் சினிமாவில் ராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்துக் கொண்டிருந்தார். 1982-ஆம் ஆண்டு காலகட்டத்தில், மிகப் பெரிய வலிமையோடு காங்கிரஸ் கட்சி ஆந்திராவை ஆண்டு வந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி ஆந்திராவின் முதலமைச்சரை மாற்றிக் கொண்டே இருந்தார். யார் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைமைக்கு காவடி தூக்குகிறாரோ அவரின் தலையில் முதலமைச்சர் கிரீடம் வைக்கப்பட்டது. ஆந்திரா மக்கள் இதனால் கடுமையான வெறுப்பும் அதிருப்தியும் கொண்டிருந்தனர்.

பார்த்தார் என்டிஆர்! காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு  மிகவும் குறைந்திருந்த ஒரு தருணத்தில், “இது என்ன அவலம்! ஆந்திரா மக்களின் தலைமையை எங்கோ இருக்கும் டில்லி நிர்ணயிப்பதா? இது நமது தேசம், நமது மாநிலம். நமது மொழி. நாமே தலைமைத்துவத்தை நிர்ணயிப்போம்” என முழங்கி தெலுகு தேசம் கட்சியை அந்தப் பொருத்தமான நேரத்தில் தோற்றுவித்தார். பிரச்சாரம் செய்தார். எம்ஜிஆரை விடக் குறுகிய காலத்தில் அடுத்த ஓராண்டிலேயே ஆந்திராவின் முதலமைச்சரானார். அந்த தெலுகு தேசம் கட்சி இராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்றும் முக்கிய அரசியல் கட்சியாக ஆந்திராவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா அரசியல் நமக்குப் பொருந்தாது என சிலர் கூறலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, மேற்காணும் இரண்டு உதாரணங்கள் – அரசியல் கட்சி தொடங்க பொருத்தமான சூழல் அமைந்திருக்க வேண்டும் – என்ற அரசியல் சித்தாந்தத்தைச் சுட்டிக் காட்டத்தான்! நமது நாட்டுக்கு வருவோம்!

மக்கள்ஆதரவைத் திரட்டிய எம்.ஜி.பண்டிதன்

டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன்

இந்தியர் கட்சி என்று வரும்போது, 1988-ஆம் ஆண்டில் (டான்ஸ்ரீ) எம்.ஜி.பண்டிதன் மஇகாவிலிருந்து விலக்கப்பட்ட தருணத்தில் அவருக்கு ஆதரவாக எழுந்த எழுச்சியால்தான் ஐபிஎஃப் கட்சி உருவானது. பண்டிதனின் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அவரைப் பழிவாங்கி விட்டார்கள் என அவரின் ஆதரவாளர்கள் கொந்தளித்த சூழ்நிலைதான் அந்தக் கட்சி அடுத்த சில ஆண்டுகளுக்கு வெற்றி நடை போட்டதற்கான காரணம். நாடு முழுவதும் அவர் உரையாற்ற சென்ற இடங்களில் எல்லாம் 10 ஆயிரம் பேர்வரை திரண்ட வரலாறு உண்டு. துங்கு ரசாலியின் செமாங்காட் 46 கட்சியுடன் கூட்டணி கண்டு, இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட சாதனையையும் ஐபிஎஃப் கொண்டிருந்தது. அதன் ஆரம்ப கால வெற்றிக்குக் காரணம் அப்போது கட்சி தொடங்கப்பட்டதற்கான சூழல். அந்தக் கட்சியின் இப்போதைய நிலைமை பற்றி விவாதிக்கத் தேவையில்லை.

இவ்வளவு ஏன்? அன்வாரின் பிகேஆர் கட்சியின் தோற்றமும், துணைப் பிரதமராகவும், அம்னோ துணைத் தலைவராகவும் அவர் நீக்கப்பட்டதால் எழுந்த கொந்தளிப்பின் விளைவுதான். அந்தச் சூழல்தான் பிகேஆரின் வளர்ச்சிக்கான அடிப்படை பலம். 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின்னர் 2018-இலும் 2022-இலும் ஆட்சியைப் பிடித்தது பிகேஆர்.

தனி இந்தியர் கட்சிக்கு இது பொருத்தமான நேரமா?

ஜாக்கிர் நாயக் வழக்கு தீர்ப்பு – அதற்காக இராமசாமிக்கு ஆதரவாகத் திரண்ட 1.5 மில்லியன் மக்கள் நிதி – சம்பவங்களுக்கு முன் – இராமசாமி புதிய கட்சியை அறிவித்திருந்தால், அதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும் ஆதரவும் ஏற்பட்டிருக்காது.

அப்படி அவர் செய்திருந்தால், ஜசெகவில் இருந்து விலகிய ஒருவரின் சுயநல நோக்கம் – புலம்பல் – என அவரின் அரசியல் பகைவர்களால் புதிய கட்சி தோற்றுவிக்கும் நகர்வு எள்ளி நகையாடப்பட்டிருக்கும்.

ஆனால், ஜாக்கிர் நாயக் வழக்கு இந்திய சமுதாயத்தில் இராமசாமியின் பிரபலத்தை-கவன ஈர்ப்பை- அதிகரிக்கச் செய்திருக்கிறது.

டி.பி.விஜேந்திரன்

1978-ஆம் ஆண்டில் கெர்லிங் சிலை உடைப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக இலவசமாக வழக்காட முன்வந்த ஒரே காரணத்தால் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலமானார். அந்த பிரபலத்தினால், 1979-ஆம் ஆண்டு மஇகா தேர்தலில் முதலாவது மத்திய செயலவை உறுப்பினராக மிக அதிக வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜேந்திரன்.

இப்போது இராமசாமிக்கும் அதே போன்ற ஒரு சூழல். ஜாக்கிர் நாயக் வழக்கால் நாட்டின் ஒட்டுமொத்த மலேசியர்களின் – குறிப்பாக இந்தியர்களின் – பார்வையும் கவனமும் தன் பக்கம் திரும்பியிருக்கும் ஒரு பொருத்தமான சூழலில் புதிய கட்சியை அறிவித்திருக்கிறார் இராமசாமி.

எல்லா இந்தியர் கட்சிகளும் அன்வார் பக்கம்! இனி இந்திய சமூகத்தின் குரல் யார்?

இன்னொரு விதத்திலும் இராமசாமியின் புதிய கட்சி தொடங்கப்படுவதற்கு இது பொருத்தமான சூழல். பிகேஆர், ஜசெக கட்சிகளில் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் இருக்கிறார்களே தவிர – அந்தக் கட்சிகள் அன்வார் தலைமையில் ஆட்சி அமைத்திருப்பதால் – இந்திய சமூகத்தின் விவகாரங்களை துணிச்சலுடன் பேச அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தயங்குகிறார்கள்.

அந்தக் கட்சிகளிலும் இந்தியத் தலைவர்களுக்கு பதவி ஆசைகள் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன. முன்னெச்சரிக்கையாகப் பேசுகிறார்கள். ஹிண்ட்ராப் காலத்து வீரவசனங்கள் இப்போது இல்லை. 3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்ற முழக்கங்களை இப்போது யாரும் முணுமுணுப்பது கூட இல்லை.

மஇகாவோ, தேசிய முன்னணி சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த மாநாட்டில் அடுத்த பொதுத் தேர்தல்வரை அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன். மஇகாவும் ‘சில எதிர்பார்ப்புகளுடன்’ – சில ‘பரிந்துரைகளின்’ பதில்களுக்காக – காத்திருப்பதால் அவர்களாலும் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எதிராக ஆணித்தரமாக – பகிரங்கமாக – வலியுறுத்த முடியாத சூழல். அன்வாரை ஆதரிக்கும் தேசிய முன்னணியின் ஓர் அங்கம் மஇகா என்பது இன்னொரு சிக்கல்!

ஐபிஎஃப், மக்கள் சக்தி கட்சிகளின் நிலைமையும் நமக்குத் தெரிந்ததுதான்! பொன்.வேதமூர்த்தியின் எம்ஏபி கட்சியோ-ஹிண்ட்ராப் இயக்கமோ – நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் உளவாளியின் மனித உரிமைக்காகப் போராடுவதிலும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்து போயும் போயும் மகாதீருடன் விவாதிப்பதிலும் நேரத்தையும், ஆற்றலையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறது. ஜாக்கிர் நாயக் விவகாரத்தில் இராமசாமிக்கு ஆதரவாகக் கூட்டம் போட்டதிலும் – நிதி திரட்டியதிலும் – மட்டும் இந்திய சமூகத்தின் உணர்வுகளுடன் தங்களுக்கும் பிணைப்பிருக்கிறது எனக் காட்டிக் கொண்டது ஹிண்ட்ராப்.

இந்நிலையில், அதிருப்தி இந்தியர்களின் குரலாக ஒலிக்க – இந்திய சமூகத்தின் போராட்டத்தைத் தொடர – ஓர் அரசியல் கட்சிக்கான வெற்றிடம் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.

அத்தகைய ஓர் இந்தியர் அரசியல் கட்சியைத் தோற்றுவிக்க முன்வந்திருப்பதால் இராமசாமியின் ‘குரலற்றவர்களின் குரலாக ஒலிப்போம்’ என்ற சுலோகமும் பொருந்தி வருகிறது.

எனவே, ஒரு பொருத்தமான நேரத்தில் – வேறு சிலர் முயற்சி எடுத்து பின்வாங்கிய தருணத்தில் – புதிய கட்சியை அறிவித்திருக்கிறார் இராமசாமி.

மக்கள் ஆதரவு கிடைக்குமா?

இத்தனை வலிமை வாய்ந்த பெரிய கட்சிகளின் மத்தியில் இந்தியர்களின் மக்கள் ஆதரவைப் பெற முடியுமா என்ற கேள்விகளும் இராமசாமியின் புதிய கட்சி குறித்து முன்வைக்கப்படுகின்றன.

மக்கள் ஆதரவு என்பது கட்சிகளின் பலத்தைப் பொறுத்ததல்ல! வாக்காளர்களின் மன உணர்வைப் பொறுத்தது! 2008-ஆம் ஆண்டில் அமைச்சுப் பொறுப்புகளுடன் வலிமையாகத் திகழ்ந்த மஇகாவால், தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்திய வாக்குகளைத் திசை திருப்ப முடியவில்லை. ஹிண்ட்ராப் பிரச்சனை காரணமாக 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இந்திய சமூக வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக விழுந்தன.

இன்றைய நிலையில் அதிகமான இந்தியர்களைக் கொண்டவை பிகேஆர்-ஜசெக-மஇகா-ஆகிய 3 கட்சிகள்தான். ஆனால், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக் காட்டும் கூட்டணிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இந்திய வாக்காளர்கள் இப்போது இல்லை. எந்த அரசாங்கம் அமைந்தாலும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வில்லை – தங்களுக்கென வாய்ப்புகள் இல்லை – என்ற அதிருப்தியின் உச்சகட்டத்தில் இந்திய சமூகம் கொந்தளித்துக் கிடக்கிறது. எதிர்ப்புக் குரல்களின் முழக்கங்களின் ஒலி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எல்லா இந்தியர் கட்சிகளும் – இந்தியர்களை அதிகமாகக் கொண்ட பல இனக் கட்சிகளும் – அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் பக்கம் என்றால் – தங்களுக்கென குரல் கொடுக்கப் போவது யார் என இந்தியர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் சூழலில் இராமசாமி கட்சி தொடங்குவதும் பொருத்தமான தருணமே!

அரசியல் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் முயற்சிகளின் தொடக்கம்தான் முக்கியமே தவிர, நடக்குமா, நடக்காதா என்ற ஆரூடங்களும், சோதிடங்களும் அரசியல் களத்திற்கு ஆகாது. மக்கள் ஆதரவு கிடைக்குமா என கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்குவதுதான் பயனளிக்கும்.

இரண்டாவது ஓரின வழக்கில் அன்வார் சிறைக்குப் போனபோது அவரின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்தது என்றுதான் அனைவரும் கருதினார்கள். ஆனால் அவர் தன் அரசியல் போராட்டத்தைக் கைவிடவில்லை. அரசியல் வியூக முயற்சிகளைக் கைவிடவில்லை. அதனால்தான் 75-வது வயதில் இன்று பிரதமராக அவரால் வர முடிந்திருக்கிறது.

அதே போல, இந்தியர்களின் ஆதரவை இராமசாமி பெறுவாரா என்பதை அவர் மேற்கொள்ளும் நகர்வுகள், வியூகங்கள், முயற்சிகள்தான் நிர்ணயிக்கும். ஆரூடங்கள் அல்ல!

கடந்த 15 ஆண்டுகளாக பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும், காலை 7.00 மணிக்கெல்லாம் முதல் வேலையாக தன் சமூக ஊடகப் பக்கங்களில் தன் கருத்தைப் பதிவு செய்பவர் இராமசாமி. இப்போது கட்சி ஒன்றின் அரசியல் தேசியத் தலைவராக அவரின் அத்தகைய பார்வைகளும், கருத்துகளும் ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் முக்கியத்துவம் பெறும்.

‘காலையில் விழித்தவனும், கடுமையாக உழைத்தவனும் தோற்றதாக சரித்திரம் கிடையாது’ என்பது டத்தோஸ்ரீ சரவணன் மேடையில் அடிக்கடி முழங்கும் வாசகம்.

இந்திய சமுதாயத்தின் ஆதரவைப் பெற – நம்பிக்கையைப் பெற – இராமசாமியும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியர்களுக்காகப் போராடுவதில் – யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் – சமரசப் போக்கைக் கடைப்பிடிக்காதவர்  என்ற நம்பகத் தன்மையின் வெளிச்சம் – ஆழ்ந்த கல்வியறிவோடு கூடிய அறிவாற்றல் – சிந்தனைத் திறன் – ஆகியவை அவருக்கிருக்கும் சாதக அம்சங்கள். முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் என்றோ- முன்னாள் பிறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்றோ – அவர் அடைமொழி போட்டாலும் போட்டுக் கொள்ளாவிட்டாலும் அவருக்கென இருக்கும் செல்வாக்கு குறையப் போவதில்லை.

தனக்கென ஆமாம் சாமி போடும் ஆதரவாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை வழிநடத்தாமல் –அரசியல் சார்பற்ற எல்லா இந்திய இயக்கங்களையும் – தனிமனிதர்களையும் – பட்டதாரி இளைஞர்களையும் அவர் கட்சிக்குள் ஈர்க்க வேண்டும்.

இந்தியர்களுக்கான ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்க அவரின் முன்னால் பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஹிண்ட்ராப் – எம்ஏபி கட்சியுடன் இணையலாம். மற்ற சில சிறிய இந்தியர் கட்சிகளுடன் ஒருங்கிணையலாம்.  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேரலாம். ஒற்றுமை அரசாங்கம் உடைந்தாலும் சில அரசியல் வாய்ப்புகள் உருவாகலாம்.

‘உரிமை’ கட்சிக்கு, காலம் என்னென்ன திருப்பங்களை வைத்திருக்கப் போகிறதோ?

-இரா.முத்தரசன்