Home Photo News இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து தேர்தல் உடன்பாடுகள்! வலிமையடைவது போல் தோற்றம்!

இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து தேர்தல் உடன்பாடுகள்! வலிமையடைவது போல் தோற்றம்!

363
0
SHARE
Ad

(அண்மைய சில நாட்களாக மாறிவரும் இந்தியத் தேர்தல் களம் குறித்து தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

  • தமிழ் நாட்டில் பாஜக பக்கம் தாவிய காங்கிரசின் விஜயதரணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!
  • உத்தரப் பிரதேசத்தில் மனம் மாறி காங்கிரசுடன் கைகோக்கும் அகிலேஷ் யாதவ்!
  • வட மாநிலங்களில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இணைகின்றன!
  • ஒரே நாளில் வலிமை பெற்று பாஜகவை ஆட்டம் காணச் செய்த இந்தியா கூட்டணி!
  • ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் நடிகர் பவன் கல்யாண் கட்சியும் தேர்தல் கூட்டணி!

அரசியலில்  மாற்றங்கள் என வரும்போது ஒரு நாள் என்பதுகூட  அதிக காலம் என்பார்கள். அதற்கு ஏற்ப ஒரே நாளில் இந்திய அரசியலில் சில மாநிலங்களில் அதிரடியான காட்சிகள் திருப்பங்களுடன் அரங்கேறியிருக்கின்றன.

இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை – அவர்களுக்கிடையில் தேர்தல் கூட்டணி அமைவது கடினம் – என ஊடகங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு நேர் எதிர்மாறாக, ஒரே நாளில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

ஏறத்தாழ ஐந்து மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவதாக தமிழ்நாடு!

விஜயதரணி
#TamilSchoolmychoice

காங்கிரசின் தமிழ்க் குரலாக பல விவாத மேடைகளில் ஆணித்தரமாக முழங்கி வந்தவர் விஜயதரணி. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரான அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று விளவங்கோடு.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அதில் உடன்பாடு கொள்ளாமல்  பாஜக பக்கம் சாய்ந்து இருக்கிறார் விஜயதரணி. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியிருக்கிறார்.

அவருக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என பேசப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ்-சமஜ்வாடி கூட்டணி உறுதியானது

அயோத்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட ராமர் ஆலயத்தின் திருவுருவச் சிலை

இந்திய மாநிலங்களில் மிக அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டிருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம். மொத்தம் 80 தொகுதிகள்! இங்குதான் புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய ராமர் ஆலயம் ஜனவரி 22ஆம் தேதி திறப்பு விழா கண்டது.

ராமர் கோயில் கோலாகலத் திறப்பு விழா கண்டதால், இந்த மாநிலத்தில் பெருவாரியான தொகுதிகளை பாஜக வெற்றி கொள்ளும் என  எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை இந்த மாநிலத்தில் சக்தி வாய்ந்த  மாநிலக் கட்சியான சமாஜ்வாடி-காங்கிரஸ் இடையில் கூட்டணி அமைப்பதில் முரண்பாடுகள் நிலவின.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஒரு வழியாக காங்கிரஸுடன் தேர்தல் உடன்பாடு கண்டிருக்கிறது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, எஞ்சிய 63 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் பாஜகவுக்கு கடுமையான போட்டிகள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா கூட்டணிக்கும் இந்த தேர்தல் உடன்பாடு பெரும் ஊக்கத்தை தந்திருக்கிறது.  உத்தரப்பிரதேசத்திலேயே இரண்டு முரண்பட்ட கட்சிகளுக்கு இடையில் தேர்தல் உடன்பாடு சாத்தியம் என்பதால் மற்ற மாநிலங்களிலும்  பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் சாத்தியத்தை இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.

இதுவரையில் தனித்துப் போட்டியிடுவேன் – காங்கிரசுக்கு தொகுதிகள் தரமாட்டோம் – என விடாப்பிடியாக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஒரு வழியாக காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு காண்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

ஆம் ஆத்மியுடன் கைகோக்கும் காங்கிரஸ்

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. தற்போது அதிரடியாக அந்த முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் உடன்பாடு கண்டிருக்கிறது.

எல்லாக் கட்சிகளுமே, பாஜகவை தோற்கடிப்பதற்காக ஒரு முனையில் திரள வேண்டும் என்ற சிந்தனையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு  வந்துவிட்டது போல் தெரிகிறது.

அதற்கேற்ப, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த தீவிர பேச்சுவார்த்தைகளின் காரணமாக, ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சுமுகமான தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லி, கோவா, குஜராத், சண்டிகர், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடுகள் காணப்பட்டிருக்கின்றன,

டெல்லி மாநிலத்தில் உள்ள ஏழு நாடாளுமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மியும், மூன்று தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.

ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் கூட்டணி

தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு மாநிலம் ஆந்திரா. ஜெகமோகன் ரெட்டி முதலமைச்சராக இருக்கும் ஆந்திரா மாநிலத்தில் அவருக்கு எதிராகக் களம் அமைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. மறைந்த பிரபல நடிகர் என்.டி.ராமராவின் மருமகன்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஆந்திராவில் இருந்து  தனி மாநிலமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா பிரிந்தது.

எஞ்சிய ஆந்திர மாநிலத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் மாநில சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் இங்கு நடைபெறவிருப்பது.

151 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றொரு கட்சியான ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஜனசேனா, பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சியாகும்.

அண்ணன் சிரஞ்சீவி பிரபல நடிகராக இருந்தும் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டு, ரஜினிகாந்த் போன்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் பவன் கல்யாண் நடித்துக் கொண்டே தொடர்ந்து அரசியலில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்  151 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பவன் கல்யாண் கட்சி 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன

இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்தியா கூட்டணி வலிமை பெற்று வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தின் நடப்பு முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இவ்வாறாக திடீரென எல்லா எதிர்க் கட்சிகளும், பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டிய அவசியத்தையும், பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய முக்கியத்துவத்தையும், ஒரு வழியாக உணர்ந்துள்ளன.

இந்த திடீர் அரசியல் மாற்றம், பல தொகுதிகளில் பாஜகவுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி முழங்குவது போல் 400 தொகுதிகளை பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றுவது என்பது எட்டாக் கனவாகவே இருக்கும் என்பதை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் இந்தத் திருப்புமுனை தேர்தல் உடன்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

– இரா.முத்தரசன்