
கோலாலம்பூர் : “எந்தவொரு நாட்டிலும் மனித மூலதனம் மிகப்பெரிய சொத்தாக இருப்பதால், உலக அளவில் போட்டியிடும் வகையில் அனைத்து இனங்களிலும் கைத்திறன் திறமைகளை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் ஆர்.ரமணன் கூறினார்.
இதுபோன்ற திறமைகளில் போட்டி போடுவதில் மலேசியா மற்ற நாடுகளை விட பின் தங்கிவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டின் முதல் நாளில் ரமணன் உரையாற்றினார்.
“பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவதில் ஒற்றுமை அம்சங்கள்” என்ற தலைப்பில் மதானி கலந்துரையாடல் அமர்வின் போது, உரையாற்றிய ரமணன் ”நாம் பாரபட்சமின்றி நாட்டில் சிறந்த திறமைகளை வளர்த்து மக்களை முன்னணியில் வைக்க வேண்டும், அதனால் நாம் உலகளவில் போட்டியிட முடியும்,” என்று கூறினார்.
பூமிபுத்தரா வலுவூட்டல் நிகழ்ச்சி நிரல் பிற இனங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவர்களில் சிலர் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருப்பதால் அரசாங்கத்தின் கவனமும் உதவியும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
1960-ஆம் ஆண்டுகளில் தோட்டங்கள் துண்டாடப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் இந்தியர்களிடையே முன்னேற்றத்திற்கு முக்கிய சவாலாக உருவான இந்தியர்களின் நகர்ப்புற வறுமையின் பிரச்சினையை அவர் மேற்கோள் காட்டினார்.
“அவர்களுக்கு வேலை இல்லை, தங்குவதற்கு இடமில்லை. அவர்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். மற்றும் செயல்பாட்டில், அங்கு வேலை செய்வதற்குத் தேவையான திறன்கள் இல்லாததால் நகர்ப்புற ஏழைகளுடன் சேர்க்கப்பட்டனர். வெளிநாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக இந்தோனேசியர்கள் மற்றும் வங்காளதேசிகள் வருகையால் நாட்டில் நிலைமை மோசமடைந்தது” என்று அவர் மேலும் கூறினார்.