Home இந்தியா கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை – திருமாவளவன் பிரச்சாரம்!

கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை – திருமாவளவன் பிரச்சாரம்!

353
0
SHARE
Ad

பெங்களூரு : 28 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக பிரதேசத்தில் இரண்டு கட்ட வாக்களிப்பு நடைபெறுகிறது.

இரண்டாவது கட்ட வாக்களிப்பு தினமான ஏப்ரல் 26-ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில் எஞ்சிய 14 தொகுதிகளுக்கு எதிர்வரும் மே 7-ஆம் தேதி மூன்றாவது கட்டத் தேர்தலின்போது வாக்களிப்பு நடைபெறுகிறது.

கர்நாடகம் பிரச்சனையான- கொந்தளிப்பான சூழல் கொண்ட மாநிலமும் அல்ல! பின் ஏன் இங்கு 2 கட்டத் தேர்தல்கள் என்ற கேள்வி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எழுப்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து 2 முக்கியத் தலைவர் கர்நாடகா சென்று அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து தலைவர்கள் யாரும் மற்ற மாநிலங்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்றதில்லை. அவ்வளவாக அழைக்கப்படுவதுமில்லை. மொழிப் பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம். கட்சித் தலைவர் என்ற அடையாளத்தோடு சிலர் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவள் இந்தியா கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அவரை முதலமைச்சர் சித்தராமையாவும் வரவேற்று உபசரித்திருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சில வெளிமாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். வாகன ஊர்வலப் பிரச்சாரம், மேடைப் பேச்சு என கேரளாவிலும், கர்நாடகா மாநிலத்திலும் அண்மையில் கலக்கினார். அந்த அளவுக்கு மற்ற மாநிலங்களிலும் பிரபலமடைந்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை போலீசாக பணிபுரிந்த கர்நாடகா மாநிலத்தில் அவருக்கு சிங்கம் என்று பெயர். சூர்யா நடித்த சிங்கம் திரைப்படங்களால் ஏற்பட்ட தாக்கம்.

பாஜக-காங்கிரஸ் இடையில் மிகக் கடுமையான போராட்டம் நடக்கும் மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. பாஜக 28 தொகுதிகளில் கணிசமானவற்றைக் கைப்பற்றலாம் என கனவு காணும் மாநிலம். அந்தக் கனவுக்கு அடிப்படைக் காரணம், கடந்த 2019 பொதுத் தேர்தலில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதுதான்!

இந்த முறை பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. எஞ்சிய 3 தொகுதிகளை தங்களுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஜனதா தளத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. குமாரசாமி தலைமையிலான கட்சி மதச் சார்பற்ற ஜனதா தளம்!