Home இந்தியா இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமா?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமா?

582
0
SHARE
Ad
இன்று சனிக்கிழமை நடைபெற்ற 6-வது கட்ட வாக்களிப்பின்போது புதுடில்லியில் வாக்களித்த ராகுல் – சோனியா காந்தி

புதுடில்லி : இன்று சனிக்கிழமை (மே 25) இந்தியப் பொதுத் தேர்தலின் 6-வது கட்ட வாக்களிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் ஒரே ஒரு கட்ட வாக்களிப்பு எஞ்சியிருக்கும் நிலையில் எங்கும் எழுந்திருக்கும் கேள்வி, காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமா? என்பதுதான்!

காங்கிரஸ் தனித்து 100 தொகுதிகளைக் கூட பெற முடியாது என்கிறார் பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர், ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணிதான் பெரும்பான்மை பெற்று கூட்டணி அமைக்கும் என அடித்துக் கூறுகிறார்.

#TamilSchoolmychoice

பிரபாகரின் கருத்தை வேறு சில அரசியல் ஆய்வாளர்களும் ஆதரிக்கின்றனர். அப்படியே அவர்கள் சொல்வது போல் நடக்கிறது என வைத்துக் கொள்வோம். அதைத் தொடர்ந்து 2 காட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் அரங்கேறலாம்!

முதலாவது காட்சி – பாஜகவும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெரும்பான்மை பெற முடியாத பட்சத்தில், எஞ்சிய அனைத்துத் தொகுதிகளையுமே இந்தியா கூட்டணி கட்சிகளால்  வெற்றி கொள்ள முடியுமா? என்பது! இதற்கான விடை, இல்லை என்பதுதான்!

காரணம், பல கட்சிகள் பாஜக கூட்டணியிலும் சேராமல், காங்கிரஸ் இணைந்துள்ள இந்தியா கூட்டணியிலும் சேராமல் தனித்து வலிமையுடன் தேர்தலைச் சந்திக்கின்றன. மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ் நாட்டின் அதிமுக, ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கட்சிகள் கணிசமான அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கட்சிகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் யாரை ஆதரிக்கும் என்பது இன்றைய தேதியில் யாருக்கும் விடை தெரியாத கேள்வி!

இந்தக் கட்சிகளெல்லாம் சேர்ந்துதான் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதுதான் பாஜக எதிர்ப்பாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

பாஜகவுக்கு 200+ தொகுதிகள் மட்டுமே கிடைத்தால், மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் – எழக்கூடிய இரண்டாவது பிரச்சனையான காட்சி – இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே மேசையில் அமர்ந்து ராகுல் காந்தியையோ, அல்லது இன்னொருவரையோ பிரதமராக ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான்!

இந்தியா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் பிரிந்து வந்து மோடியை அல்லது பாஜகவை ஆதரிக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

எனவே, பாஜக 200+ தொகுதிகள் மட்டுமே பெறக் கூடிய பட்சத்தில் இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 272 தொகுதிகளை ஒருங்கிணைந்து பெற முடியுமா? – அப்படியே பெற்றாலும் ஒருமித்த கருத்துடன் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியுமா? என்ற கேள்விகளும் விவாதங்களும் தொடர்கின்றன.