Home Photo News உரு தொடர் : ஆசிரியராகவோ, தையல் கடைக்காரராகவோ வர விரும்பிய முத்து நெடுமாறன்!

உரு தொடர் : ஆசிரியராகவோ, தையல் கடைக்காரராகவோ வர விரும்பிய முத்து நெடுமாறன்!

182
0
SHARE
Ad

இன்றைக்கு மொழிகளுக்கான எழுத்துருவாக்கம், அவற்றைக் கையடக்கக் கருவிகளிலும், கணினிகளிலும், இணைய வெளிகளிலும் உள்ளிடு செய்யும் தொழில்நுட்ப நுணுக்கம் ஆகிய துறைகளில் அனைத்துலக அளவில் அறியப்படுபவர் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன். இத்தகைய ஆற்றலும் பிரபல்யமும் கொண்ட முத்து நெடுமாறன் இளம் வயதில் ஒரு தையல் கடைக்காரராகவோ, அல்லது ஆசிரியராகவோ வர விரும்பினார் என்பது பலருக்கு ஆச்சரியமானத் தகவலாக இருக்கலாம்.

காரணம் முத்து நெடுமாறனின் தந்தையார்  முரசு நெடுமாறன் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதுடன் அதற்கு முன்னர் தையல் தொழிலும் செய்தவர்.  அந்த சூழல்களில் வளர்ந்ததால் – வழக்கமாக ஒரு புதல்வனுக்கு அவனின் தந்தைதான்  ஹீரோ என்பது போல – யார் கேட்டாலும் நான் தையல் கடைக்காரராக போகிறேன் அல்லது ஆசிரியராகப் போகிறேன் என்று கூறினார் முத்து.

ஆனால் விதியோ அவர் வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடியது என விவரிக்கிறது தமிழ்நாட்டிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய ஊடகத்தில் தொடராக பதிவேற்றம் கண்டு வரும் ‘உரு’ கட்டுரைத் தொடர். அந்தத் தொடரில் முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களைக் சுவைபடத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறார் ஊடகவியலாளர் கோகிலா. முத்து நெடுமாறனுடனான பல்வேறு சந்திப்புகள்-உரையாடல்களின் அடிப்படையில் இந்தத் தொடர் எழுதப்படுகிறது.

எழுத்துரு நுணுக்கங்களை இளம் வயதிலேயே கற்க முற்பட்டார்…

#TamilSchoolmychoice

இந்த தொடரின் 4-ஆம் 5-ஆம் அத்தியாயங்களில் முத்துவின் இளம் வயது பள்ளி வாழ்க்கையை விவரிக்கிறார் கோகிலா. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதுபோன்று மாணவப் பருவத்திலேயே தமிழை அழகாக வடிவமைத்து கரும்பலகையில் எழுதிய முத்துவின் திறனை அடையாளம் கண்டு ஊக்குவித்தார் சுப்பிரமணி என்ற பள்ளி ஆசிரியர்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட தமிழ் தட்டச்சு இயந்திரம் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் அதனைக் கொண்டு தட்டச்சு செய்து பயிற்சி பெற்றதாகவும் கூறுகிறார் முத்து. இப்படியாக அவரின் இளம் வயது வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் எழுத்துக்கள்- எழுத்துருக்கள் -தமிழ் எழுத்துகளை ஓர் அழகியலோடு வடிவமைப்பது – இதன் தொடர்பிலான கேலிகிராபி என்னும் எழுத்து வடிவத்தில் ஆர்வம் – என முத்து நெடுமாறனின் பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது. இதுவே, பிற்காலத்தில் அவர் கணினி, இணைய தளங்களில் எழுத்துரு தொடர்பான பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்த காரணிகளாக அமைந்தன.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தமிழ் இயக்கங்களில் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்த முத்து, அந்த இயக்கங்களின் சார்பில் வெளியிடப்படும் மலர்களுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தமிழில் அச்சிடும் முறைகள் நுணுக்கங்கள் குறித்தும் அவர் அறிந்து கொண்டார். அந்த காலத்தில் தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்களின் உள்ளடக்கங்கள் எல்லாம் முதலில் அச்சுக் கோர்த்து பின்னர்தான் அச்சடிக்கப்படும். அதற்கென பிரத்தியேக அச்சுக்கோர்ப்பாளர்கள் இருந்தார்கள். இரும்பிலான அந்த தமிழ் எழுத்துக்கள் இந்தியாவில் இருந்துதான் தயாரித்து இங்கு கொண்டு வரப்படும். அத்தகைய நினைவு மலர்களின் பொறுப்பாளர் என்ற பணிகளின் மூலம் தனக்கு கிடைத்த சில அனுபவங்களையும் விவரிக்கிறார் முத்து.

கைகொடுத்த ரொட்டி சானாய்…

முத்து நெடுமாறன்

பட்டப்படிப்பு முடிந்ததும் வேலை தேடும் காலகட்டத்திலும் அதன் பிறகு வேலை கிடைத்ததும் ஓய்வு நேரங்களிலும் அச்சு கோர்ப்பது குறித்து ஆர்வத்துடன் தெரிந்து கொண்டார் முத்து.

பல்கலைக்கழக படிப்பு முடிந்ததும் ஒரு பொறியியல் நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது கணினியில் டாஸ் (DOS) என்னும் தொழில்நுட்பம் இருந்தது. மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கணினித் துறையில் இன்னும் கால்பதிக்காத காலம்.

அலுவல் பணிகளுக்கு இடையில்  ஆங்கிலத்தில் கணினியில் தோன்றும் ஆங்கில எழுத்துக்களைப் போன்று ஏன் தமிழ் எழுத்துக்களையும் கணினித் திரையில் தோன்றச் செய்ய முடியாது என்ற கேள்வியின் தேடலில் தொடங்கியது முத்துவின் வேள்வி.

வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் தான் வேலை பார்த்த பொறியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து ஆங்கில மொழி போன்று தமிழையும் கணினித் திரைக்குள் கொண்டு வரலாமே என முயற்சிகளும் மேற்கொண்டார் முத்து. முத்துவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தந்தார் நிறுவனத்தில் அவரின் மூத்த அதிகாரி ஒருவர்.

வேலை முடிந்து இரவுகளில்தான் முத்துவின் அந்த முயற்சிகள் என்பதால் இரவு நேர வயிற்றுப் பசியை வெல்வதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தார். மலேசியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், எத்தனை சிறிய, பெரிய உணவகமாக இருந்தாலும் தவறாமல் கிடைக்கும் உணவு ரொட்டி சானாய். தமிழ் நாட்டில் ‘பரோட்டா’. அதுவே முத்துவுக்கு பிடித்தமான உணவும்கூட! ரொட்டி சானாயை வாங்கி சாம்பார் தால்சா என்னும் கறியுடன் சேர்த்து சாப்பிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு தனது எஞ்சிய நேரத்தை தமிழுக்காக செலவிட்டார் முத்து. அவரின் உழைப்பும் கனவுகளும் வீண் போகவில்லை.

அந்த முயற்சிகளில்கூட அவர் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருந்தது. கடுமையான பொருளாதாரப் பிரச்சினை நிலவிய காலம். குறைந்த சம்பளம். இருந்தாலும் நெஞ்சில் சுமந்திருந்த கனவுகளின் விரிவு சற்றும் குறையவில்லை. இவற்றுக்கிடையில் சில நாட்களில், தான் ஆசையாக சாப்பிடும் ரொட்டி சனாய் உணவைத் தியாகம் செய்துவிட்டு, அந்தப் பணத்தைச் சேமித்து தனது பணிகளுக்குத் தேவைப்படும் ‘நுண்சில்லுகள்’ (சிப்ஸ்) வாங்கப் பயன்படுத்தினார். முத்துவின் அந்தத் தியாகத்தை ‘தமிழ்ப் பசி வயிற்றுப் பசியை வென்றது’ என அழகாக விவரிக்கிறார் ‘உரு’ கட்டுரைத் தொடரை எழுதும் கோகிலா.

பல்வேறு பரிசோதனைகள் – முயற்சிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தமிழ் மொழியை பதிவிட்டார் முத்து. ‘தமிழ்’ என்று சொல், கணினித் திரையில் முதன் முதலில் தோன்றிய தருணத்தில் முத்துவுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குவியலை சொற்களால் விவரிக்க முடியாது.  அது அவரின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல! நவீன தொழில்நுட்பத்திற்குள் தன்னை நுழைத்துக் கொண்ட – காலத்தால் அழியாத தமிழ் மொழியின் வெற்றியும்கூட!

‘தமிழ்’ என்ற சொல்லை முதன் முதலில் கணினித் திரையில் தோன்றச் செய்த முத்து நெடுமாறனின் முயற்சிகளின், அந்த தொடக்கப் புள்ளி சம்பவம் நிகழ்ந்த ஆண்டு 1985. இன்றைக்கு கணினி, இணையம், கையடக்கக் கருவிகள் என எங்கும் தமிழ் மொழி வியாபித்திருப்பதற்கு முதன் முதலில் நுழைவாயிலைத் திறந்து வைத்தது முத்து நெடுமாறனின் அந்த முயற்சிகள்தான் என தொடர்கிறது ‘உரு’!

இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு

உரு : முத்து நெடுமாறன் ஏன் தமிழ்ப் பள்ளிக்கு செல்லவில்லை?