மலேசியாவில் கணினி மென்பொருள், எழுத்துருவாக்கம் துறைகளிலும் கையடக்க கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில்நுட்பத்தில் உலக அளவிலும் முத்திரை பதித்தவர் முத்து நெடுமாறன். மேடைகளில் உரையாற்றும்போது பிற மொழிகள் கலவாமல் தனித்தமிழில் உரையாடும் ஆற்றல் கொண்டவர். தமிழ் மொழி, கணினிகளிலும் கைப்பேசி போன்ற கையடக்க கருவிகளிலும் இன்று பரவலாக இடம்பெற்று இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரின் தொழில்நுட்ப பங்களிப்பாகும்.
முத்து நெடுமாறன் தன் ஆரம்பக் கல்வியை தமிழ்ப் பள்ளியிலிருந்து தொடங்கவில்லை – ஆங்கிலப் பள்ளியில்தான் தனது ஆரம்பக் கல்வியை அவர் தொடங்கினார் – என்ற ஆச்சரியமான தகவலை நமக்கு தெரிவிக்கிறது, ‘உரு’ தொடர். தமிழ்நாட்டின் இணைய ஊடகமான மெட்ராஸ் பேப்பர் எனும் ஊடகத்தில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் குறித்த சுவையான வாழ்க்கை சம்பவங்கள் தொடராக எழுதப்பட்டு வருகின்றன. மெட்ராஸ் பேப்பர் ஊடகத்தின் ஊடகவியலாளர்களில் ஒருவரான கோகிலா அந்தத் தொடரை முத்து நெடுமாறனிடம் நேர்காணல்கள் நடத்தி அதன் மூலம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அந்தத் தொடரை எழுதி வருகிறார்.
முத்து நெடுமாறனின் தந்தை முரசு நெடுமாறன் பிரபல கவிஞர் என்பதும் ஆழமான தமிழறிவு கொண்டவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் முதன் முதலில் தன் மூத்த மகனான முத்து நெடுமாறனை தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒன்றாம் வகுப்பு செல்லும்போதே தமிழில் சரளமாக எழுதப் படிக்கவும் சில திருக்குறள்களை மனப்பாடமும் செய்து வைத்திருந்தார் முத்து நெடுமாறன். எல்லாம் தந்தை கொடுத்த பயிற்சி!
முதலாம் வகுப்பில் தமிழ் ஆசிரியர் ஒரு திருக்குறளை கரும்பலகையில் எழுதி அதற்கான விளக்கத்தைச் சொல்லும் போது அந்த திருக்குறளில் இருந்த எழுத்துப் பிழை ஒன்றை சுட்டிக்காட்டினார் முத்து. அதைத் தொடர்ந்து முத்துவின் தந்தையை சென்று சந்தித்த அந்த தமிழாசிரியர் ‘நாளை முதல் இவனை என் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்’ என்று கூறிவிட்டார்.
அதன் காரணமாகவே வேறு வழியின்றி முத்துவை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார் தந்தை முரசு நெடுமாறன்.
தையல் தொழில் செய்த முத்துவின் தந்தை
நமக்கெல்லாம் முனைவராகவும், சிறந்த தமிழறிஞராகவும், கவிஞராகவும் நன்கு அறிமுகமான முரசு நெடுமாறன் ஆரம்பத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு இருந்தவர் என்ற இன்னொரு ஆச்சரியமான தகவலைத் தெரிவிக்கிறது ‘உரு’ தொடர்.
முரசு நெடுமாறனின் தந்தையார் சுப்பராயன் அவரை (கேரித் தீவு) தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படிக்க வைத்ததின் விளைவாக ஆரம்பக் கல்வியை தோட்டப்பள்ளியிலும் பின்னர் கிள்ளானிலும் படித்து முடித்தார். 1950-ஆம் 60-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் மலேசியாவில் 7-ஆம் வகுப்பை நிறைவு செய்தால் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கும். அந்த 7-ஆம் வகுப்பு படிப்பையும் நிறைவு செய்தார் முரசு நெடுமாறன்.
தந்தை சுப்பராயனோ, மகன் முரசு நெடுமாறனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கனவு கண்டார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது சுப்பராயன் மாரடைப்பால் காலமாக முரசு நெடுமாறனின் உயர்கல்வி கனவுகளும் கலைந்தன என தொடர்ந்து விவரிக்கிறது கோகிலாவின் ‘உரு’ தொடர்.
தந்தையின் இறுதிச்சடங்குகளின்போது சூள் (சபதம்) ஒன்றை மேற்கொண்டார் முரசு நெடுமாறன். தந்தை கண்ட கனவுகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் பட்டப்படிப்புகளை படிக்க வேண்டும் என்ற சூள்தான் அது!
அதனை கால ஓட்டத்தில் நிறைவேற்றவும் செய்தார் முரசு நெடுமாறன். பட்டப்படிப்பை முடித்து பின்னர் தமிழ்நாடு சென்று முதுகலை பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார் முரசு நெடுமாறன்.
ஏராளமான கவிதைப் படைப்புகளையும், தமிழ் ஆய்வு நூல்களையும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கி, தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய மலேசிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் முரசு நெடுமாறன். அவரின் மகனான முத்து நெடுமாறன் கிள்ளானில் உறவினர் வீட்டில் தங்கி ஆங்கிலப் பள்ளியில் பல இன மாணவர்களோடு தன் கல்வியைத் தொடர்ந்ததையும், அங்கு அவர் பெற்ற அனுபவங்களையும் சுவைபட தொடர்ந்து விவரிக்கின்றன ‘உரு’ தொடரின் 2-ஆம் 3-ஆம் அத்தியாயங்கள்!
-இரா.முத்தரசன்
‘மெட்ராஸ் பேப்பர் ‘ஊடகத்தின் இணையத் தொடர்பு :
https://www.madraspaper.com/
மெட்ராஸ் பேப்பர் ஊடகத்திற்கான சந்தா விவரங்கள்:
https://www.madraspaper.com/subscription/
தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:
மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு