டெல்அவிவ் : ஈரான் மீதான தாக்குதலை எப்படி நடத்துவது என இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடுகிறது.
ஈரானும் தாக்குதலை முறியடிக்கத் தயாராகி வரும் வேளையில், தூதரக அளவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தவிர்க்க, முயற்சிகள் எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களில் பலரைக் கொன்று, சிறைப்பிடித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக இஸ்ரேல் பதிலடியாகத் தொடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி டெஹ்ரான், இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 200 ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்குத் தக்க பதிலடி தருவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எச்சரித்திருக்கிறார்.
ஈரானைத் தாக்கினால் இஸ்ரேல் அணு உலைகளைக் குறிவைக்குமா? அல்லது எண்ணெய் ஆலைகளைக் குறிவைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் ஈரானின் அணு உலைகளைத் தாக்குவதற்கு இதுவே தக்க தருணம் எனக் கூறியுள்ளனர்.
7 முனைகளில் இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்நோக்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.