கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின் தேசியத் தலைவராக இருக்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
பிகேஆர் கட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்றன. அடுத்த ஆண்டு கட்சித் தேர்தலில் அன்வார் மீண்டும் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதுவே அவர் தலைவராகப் பதவி வகிக்கும் 3-வது தவணையாக – இறுதித் தவணையாக அமைந்து விடும்.
இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 2024-இல் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் மாநாட்டில் சில சட்டத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சட்டத் திருத்தங்களின் மூலம் தேசியத் தலைவரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசியத் தலைவராக இல்லாவிட்டாலும் அன்வார் பிரதமராகப் பதவி வகிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. காரணம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற்றவர்தான் பிரதமராக முடியுமே தவிர, அவர் கட்சித் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அம்னோவின் உதவித் தலைவராக இருந்து கொண்டு பிரதமராகப் பதவி வகித்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் இதற்கோர் உதாரணம்.
மஇகாவிலும், தேசியத் தலைவராகப் பதவி வகிப்பவர் – ஒரு தவணைக்கு 3 ஆண்டுகள் வீதம் – 3 தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்டவிதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மஇகா பொதுப் பேரவையில் அந்த சட்டவிதி அகற்றப்பட்டது. இதன் மூலம் இனி தேசியத் தலைவராக இருப்பவர் அவர் விரும்பும்வரை – அல்லது தேர்தலில் தோற்கடிக்கப்படும்வரை – தலைவராகத் தொடரலாம்.
இதே போன்று பிகேஆர் கட்சியிலும் எதிர்வரும் பொதுப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.