Home நாடு சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!

சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!

247
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உரையாற்றினார்.

தேர்தல்களில் தொகுதிகளை வெற்றி கண்டுள்ள நடப்பு கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து அந்தத் தொகுதியிலேயே போட்டியிட வேண்டுமென புதிய நடைமுறை அண்மையக் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதற்கு தனதுரையில் சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

“தேசிய முன்னணி அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ளும் பரிமாறிக் கொள்ளும் பாரம்பரியம் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது” என்பதை கோலாலம்பூரின் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி கூட்டணியின் 50வது ஆண்டு விழாவில் பேசுகையில் அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“இந்த நடைமுறை மஇகாவுக்கும் அம்னோவுக்கும் பொருத்தமானதல்ல. அது தவறான சித்தாந்தம். மஇகா அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தினார்.

கடந்த காலங்களில் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறை பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுக் கொடுத்திருக்கிறது. அப்போது இந்த நடைமுறை விதியைப் பின்பற்றியிருந்தால் அம்னோவுக்கு கேமரன் மலை தொகுதி கிடைத்திருக்காது என்பதையும் சரவணன் நினைவுறுத்தினார்.

“அதுதான் எங்கள் உணர்வு. இப்போது மற்ற இடங்களில் இதே உணர்வை நாம் காணவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்பெல்லாம் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளில் இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு தானாகவே தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இப்போதிருப்பது போல் வெற்றி பெற்ற கட்சியே மீண்டும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் இளைஞர் பகுதி தலைவர்கள் காலமாகும் வரை அவர்கள் வேட்பாளராக இருக்க வாய்ப்பு கிடைக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தோழமைக் கட்சிகளுக்கும் வாய்ப்பு – சாஹிட்டைப் பாராட்டிய சரவணன்

தேசிய முன்னணி கூட்டணியில் இணைந்துள்ள தோழமைக் கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல் தேசிய முன்னணி தலைவராக சாஹிட் இருந்ததற்கு சரவணன் அவரைப் பாராட்டினார்.

“நடப்பு கட்சிகளே தொடர்ந்து போட்டியிடும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், இறுதிவரை நமது தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளின் நண்பர்கள் சுவரொட்டிகளை (போஸ்டர்கள்) ஒட்டுவதே அவர்களின் வேலையாக இருந்திருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர்களில் நான்கு பேர் அந்தக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் இருந்து வந்தவர்களாவர்.

தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பே
நமது வளர்ச்சிக்குக் காரணம்

“இன்று நாம் காணும் முன்னேற்றம், சமூக நீதிக்கு, ஒற்றுமைக்கு, சட்டத்தின்படி ஆட்சி செய்த தேசிய முன்னணி அரசின் முழு அர்ப்பணிப்பே காரணமாகும். எனவே, தேசிய முன்னணியின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும், எங்கள் முன்னோடி போராளிகளின் சேவைகளையும் வரலாற்று தியாகங்களையும் இந்த வேளையில் புரிந்து கொள்வதும், அவற்றை மனதில் நிலைநிறுத்துவதும் பொருத்தமானதாக இருக்கும்” எனவும் சரவணன் கூறினார்.

“நாம் கடந்த காலத்தைப் போன்று, தற்போதும், என்றும், தேசிய முன்னணி சமூகமாக, ருக்குன் நெகாரா (Rukun Negara) கோட்பாடுகளையும் நாட்டின் அரசியலமைப்பையும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். என் நம்பிக்கை என்னவெனில், இந்த இன்றைய நிலைமைகள் நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும். வரும் எதிர்காலத் தலைமுறைகளின் வளமான வாழ்க்கை -அவர்களின் நலனுக்காக பாதுகாக்கப்பட வேண்டும்” எனவும் சரவணன் தேசிய முன்னணி மாநாட்டில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.