Home இந்தியா மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்வு- ஜெயலலிதா அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்வு- ஜெயலலிதா அறிவிப்பு

419
0
SHARE
Ad

jeyaசென்னை, மே 10- முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழும் வண்ணமும் எனது தலைமையிலான அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 500 ரூபாயும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 1500 ரூபாயும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 2000 ரூபாயும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு 3000 ரூபாயும், பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு 3500 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக ஆண்டுதோறும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியர் கல்வி கற்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை நடப்பாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் 23,454 மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 கோடியே 6 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தற்போது இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ – மாணவிகளுக்கு முன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பயனாளிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 400 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றிற்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென 32 ஆரம்ப பயிற்சி மையங்களும், செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கென 32 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென 18 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் பயன்பெறும் குழந்தைகளுக்கும் அவர்களது துணையாளர்களுக்கும் போக்குவரத்து பயணச் சலுகை வழங்கப்பட்டாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இம்மையங்களுக்கு தொடர்ந்து வருவது சிரமமாக உள்ளதால், இம்மையங்களின் முழு பயனையும் அவர்களால் பெற இயலவில்லை.

எனவே, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிகிச்சைப் பிரிவு ஓர் ஊர்தியில் இயன்முறை சிகிச்சைக் கருவியுடன் செயல்படும்.

இச்சிகிச்சைப் பிரிவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களின் கண்காணிப்பில், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முட நீக்கு வல்லுநர் ஆகியோரைக் கொண்டு செயல்படும்.

இத்திட்டத்திற்கென தொடராச் செலவினமாக 3 கோடியே 52 லட்சம் ரூபாயும், தொடர் செலவினமாக 97 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 1500 ரூபாயும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு 2500 ரூபாயும், பட்ட மேற் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு 3000 ரூபாயும் என வாசிப்பாளர் உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 1500 பார்வையற்ற மாணவ மாணவியர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.