பினாங்கு,மே.10 – மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை பதவி விலகச் சொல்லும் மஇகா சமூக அறவாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோடெனிசன் ஜெயசூரியாவின் அறிகை சிறுபிள்ளைத்தனமானது என்று பினாங்கு பாகான் தொகுதி மஇகா தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசிர்வாதம் (படம்) கடுமையாக சாடினார்.
மஇகாவில் தலைமைத்துவம், நிர்வாகம், மாநிலம், தொகுதி, கிளை என்று நாங்கள் இந்திய சமுகத்திற்கு சேவையாற்றி வந்துள்ளோம், தொடர்ந்து சேவை செய்யவும் தயராக உள்ளோம் இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை, வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜம்தான் ஆனால் தோல்வியை காரணம் காட்டி ஒரு சிறந்த தலைவரை பதவி விலகச் சொல்வது டெனிசன் ஜெயசூரியாவின் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது என்றும், எதையும் ஆழமாக சிந்திக்காமல் சீர் தூக்கிப் பார்க்காமல், பொறுப்பற்ற அறிக்கை விடுவதை டெனிசன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டத்தோ ஹென்ரி எச்சரித்தார்.
“இந்த நாட்டில் ஒரு காலத்தில் பிபிபி காணாத வெற்றியா, அல்லது ஜசெக காணாத தோல்வியா? எத்தனையோ ஆண்டுகள் மஇகா நூறு சதவீதம் வெற்றி கண்டுள்ளது என்பது வரலாறு, இன்று அரசியலில் பல மாற்றங்கள், மக்களின் சிந்தனையில் புதிய மாறுதல்கள். அதனால் சில தோல்விகளை மஇகா சந்திக்க வேண்டிய நிலை, ஆனால் தோல்வி என்பது தொடர்கதை அல்ல,மஇகாவின் தலைமை பொறுப்பை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் எடுக்கும்போது கட்சி பலவீனமாக இருந்த சூழ்நிலையை மாற்றி கட்சியை வலுவடைய செய்தார் என்பதுதான் உண்மை வரலாறு.
தற்போதைய தோல்விக்கு பல காரணங்கள் உண்டு, இன்று சந்தர்ப்பவாதிகள் அதிகமாக அரசியலில் ஊடுருவி விட்டதனால்கூட இந்த தோல்வி நிகழ்ந்திருக்கலாம், ஹிண்ராஃப் என்ற அமைப்பில் உள்ள அரசியல் சந்தர்ப்பவாதிகள் பிரதமருடன் ஒப்பந்தம் செய்ததும், மசீச கட்சி சீனர்களின் வாக்குகளை கவர முடியாமல் போனதும், அம்னோவிற்கு வேறு வழியில்லாமல் பெர்க்காசா தலைவர்களான இப்ராஹிம் அலியையும், சூல்கிப்லி நோர்டினையும் ஆதரித்தது தொகுதி வழங்கியதும், இன்னும் பலவகையானக் காரணங்கள் மஇகா தோல்விக்கு காரணமாக இருக்கையில் டத்தோஸ்ரீ பழனியை மட்டும் குறை கூறுவது மடத்தனமான செயலாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் இன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையொன்றில் டத்தோ ஹென்ரி கூறினார்,
அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
“மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ச.சாமிவேலுவிடம் இருந்து தலைமைப் பொறுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலு தொடர்ந்து மஇகாவை வழிநடத்த வேண்டும் என்பதே மஇகாவினரின் விருப்பமாகும், எனவே மஇகாவை சிறந்த முறையில் வெற்றிப் பாதைக்கு கொண்டுச்செல்ல பல வகையில் முயற்சிகள் எடுத்து வரும் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு தொல்லலைகள் கொடுக்காமல் அவரை நிம்மதியாக கட்சியை வழிநடத்த அனைத்து மஇகா பொறுப்பாளர்களும், கட்சி உறுப்பினர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும், இந்தாட்டு இந்தியர்களுக்கு என்று இருக்கின்ற ஒரே கட்சியான மஇகாவை மலேசிய இந்தியர்கள் முழுமையாக ஆதரித்து அடுத்து வரும் தேர்தல்களில் கட்சி 100 சதவீதம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்றும் மஇகா பாகான் தொகுதித் தலைவரும், ம.இ.கா பினாங்கு மாநில நிர்வாக உறுப்பினருமான டத்தோ ஹென்ரி பெனடிக் கேட்டுக் கொண்டார்.