Home உலகம் பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நவாஸ் ஷெரிப்புடன் இணைந்து பணியாற்றுவோம்- இம்ரான் கான்

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நவாஸ் ஷெரிப்புடன் இணைந்து பணியாற்றுவோம்- இம்ரான் கான்

548
0
SHARE
Ad

IMRANலாகூர், மே 16- பிரசார மேடை மீது ஏறியபோது கீழே விழுந்து காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் சந்தித்தார்.

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து விசாரித்து ஆறுதல் கூறிய நவாஸ் ஷெரீப் புறப்பட்டு சென்ற பின்னர், காணொளி  மூலம் தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய இம்ரான் கான் கூறியதாவது:-

நவாஸ் ஷெரீப் என்னை சந்தித்து ஆறுதல் கூறினார். வேற்றுமைகளை மறந்து ஒருபடி முன்னேறிச் சென்று நாட்டின் வளர்ச்சிக்காக நாம் உழைக்க வேண்டும் என அனைத்து மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

25 பாராளுமன்ற தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்துள்ளதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். வாக்காளர்களின் கைவிரல் ரேகையை ஒப்பிட்டு 4 நாட்களுக்குள் மறு வாக்கு எண்ணிக்கைக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி போராட்டத்தில் குதிக்கும்.

கைபர்-பக்துங்க்வா மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எங்கள் கட்சிக்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த மாகாணத்தில் புதிய போலீஸ் முறையை அறிமுகப்படுத்தி, தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாகிஸ்தானுக்கே முன்னுதாரணமாக சிறப்பான ஆட்சியை நடத்துவோம்.

எனக்கும் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், தீவிரவாதம் உள்ளிட்ட நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.