Home இந்தியா மன்மோகன்சிங் அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு- கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா, 22-ந்தேதி...

மன்மோகன்சிங் அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு- கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா, 22-ந்தேதி விருந்து

692
0
SHARE
Ad

soniaபுதுடெல்லி, மே20- மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாராளுமன்ற அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், 4 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடு குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்ற இருக்கிறார்.

எனவே இந்த கூட்டம்தான் 2-ம் கட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி ஆண்டு சாதனை விளக்க பட்டியலாக அமையும். நாளை மறுநாள் (22-ந்தேதி) நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

#TamilSchoolmychoice

இரு முக்கிய கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கட்சி தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள்.

Manmohan-Sliderதொடர்ந்து வெளியான ஊழல் புகார்கள், சமீபத்தில் பவன்குமார் பன்சால், அஸ்வினிகுமார் ஆகிய இரு மத்திய கேபினட் மந்திரிகள் பதவி விலகல் போன்ற நிகழ்வுகள் காரணமாக, அனைவருக்கும் திருப்தி அளிக்கும் ஆக்கப்பூர்வமான ஒரு சாதனை அறிக்கையை வெளியிடுவது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் மானியங்கள் மக்களை நேரடியாக போய் சேர வகை செய்யும் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டம், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுக்கு அனுமதி போன்ற திட்டங்கள் சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்று தெரிகிறது.

அடுத்த தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி மிகவும் நம்பியிருந்த உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு மத்திய மந்திரிகள் பதவி விலகல் பிரச்சினையில் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இந்த விருந்து நிகழ்ச்சி கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்துவார் என்றும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2-ம் கட்ட அரசு, சுதந்திர இந்தியாவில் மிகவும் பலவீனமான அரசு என்றும் அனைத்து துறையிலும் தோல்வியை தழுவிய அரசு என்றும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோர், மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளான பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா, நீதித்துறை பொறுப்புடமை சட்ட மசோதா போன்றவை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்புகளை அழித்து வருவதாகவும், சி.பி.ஐ.யை சீர்குலைத்து வருவதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளிலும் தடங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு மீது பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம் இருந்தபோதிலும் மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அடுத்த தேர்தலை அச்சம் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதுதான் நமக்கு சாதகமான அம்சம் என்று கூறிய மணிசங்கர் அய்யர், முதலில் உத்தரகாண்ட், பின்னர் இமாசலபிரதேசம், தற்போது கர்நாடக மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீழ்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, பிளவுபட்ட எதிர்க்கட்சிகளால் தேர்தலில் நாம் பயப்பட தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.