ஈப்போ, மே 25 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்திய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்த வண்ணம் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட 3 முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி ஈப்போவில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசியதற்காக ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் சு மற்றும் மே 12 ஆம் தேதி பேரணி தொடர்பாக பேராக் மாநில பிகேஆர் செயலாளர் முகமட் அனுவார் சகாரியா ஆகியோர் வரும் திங்களன்று கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சு(படம்) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை நான் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. பேரணி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அமைதிப் பேரணி 2012 சட்டம் 9(1) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் அனுவாரும் தனது முகநூல் பக்கத்தில், ஈப்போவில் கடந்த மே 12 ஆம் தேதி கறுப்புப் பேரணி நடத்தியதற்காக வரும் திங்கட்கிழமை நான் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தனக்கு அறிவிப்பு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சு மற்றும் அனுவாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தலா 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் மக்களின் பிரதிநிதி என்ற தகுதியை இழப்பதற்கான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த மே 12 ஆம் தேதி ஈப்போவில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நடந்த கறுப்புப் பேரணியில் 20,000 மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அப்பேரணியில் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரது தந்தையான கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் அதே மே 12 ஆம் தேதி பேராக் மாநிலத்தில் நடந்த கறுப்புப் பேரணி தொடர்பாக பேராக் மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பேரணியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.