Home இந்தியா தமிழ் திரைப்பட துறையில் டி.எம்.எஸ். இடத்தை எவராலும் நிரப்பமுடியாது- ஜெயலலிதா

தமிழ் திரைப்பட துறையில் டி.எம்.எஸ். இடத்தை எவராலும் நிரப்பமுடியாது- ஜெயலலிதா

626
0
SHARE
Ad

jeyalalithaசென்னை, மே 26-முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘டி.எம்.எஸ்.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான டி.எம். சவுந்தரராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

“ராதே என்னை விட்டு ஓடாதேடி” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்தரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் குரலுக்கேற்றவாறும், சிவாஜி கணேசன் அவர்களுக்கு பின்னணி பாடும்போது, சிவாஜி கணேசன் அவர்களின் குரல் போலவும், மற்ற நடிகர்களுக்குப் பாடும் போது அவரவரது குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை வித்தியாசப்படுத்தி பாடுவதிலும் வல்லவர் டி.எம்.எஸ். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு உச்சரித்துப் பாடியவர்.

முருகக் கடவுள் மீது பக்திகொண்ட டி.எம். சவுந்தரராஜன், முருகப் பெருமான் மீதான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா”, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” போன்ற பல பாடல்களுக்கு தானே இசையமைத்து உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

“நான் ஆணையிட்டால்”, “அச்சம் என்பது மடமையடா”, “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு”, “நாணமோ இன்னும் நாணமோ”, “வசந்த முல்லை போலே வந்து”, “மலர்ந்தும் மலராத”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு”, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

‘அன்பைத் தேடி’ என்ற திரைப்படத்தில் “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்று துவங்கும் பாடலிலும், ‘சூரியகாந்தி’ என்ற திரைப்படத்தில் “ஓ…மேரி தில் ரூபா” என்று துவங்கும் பாடலிலும் இவருடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம். சவுந்தரராஜன், 1960, 1970-களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.

நகைச்சுவையானாலும், சோகரசமானாலும், காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலானாலும் அனைத்து உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்தி பாடக் கூடியவர். இவரைப் போன்று முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஈடு இணையற்ற திறமை படைத்த ஒரு பின்னணிப் பாடகர் என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர். எனது 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் எனது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டு அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.